ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்காத தமிழக அரசியல்வாதிகளுக்கு நடிகர் மயில்சாமி கடும் கண்டனம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்காத தமிழக அரசியல்வாதிகளுக்கு நடிகர் மயில்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 'செத்தா உடம்புல போட்டிருக்குற துணி கூட உடன் வராது' என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2017-01-17 11:45 GMT

சென்னை

அலங்காநல்லூரில் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக  கைது செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பொதுமக்கள் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு அனுமதிக்கான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும்  ஊர்பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த 21 மணி நேரமாக ஜல்லக்கட்டு நடத்த அனுமதிகோரி அலங்காநல்லூரில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். விடிய, விடிய நடந்த போராட்டத்துக்கு பின்னர் போலீசார் 10 நிமிட அவகாசம் கொடுத்தனர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டதால் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.

இளைஞர்கள் கைது செய்யப்பட்ட தகவல் அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அவர்கள் அணி அணியாக திரண்டு அலங்காநல்லூர் வந்தனர். அங்குள்ள வாடிவாசல் அருகே பொதுமக்கள் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் திரண்டதால் மீண்டும் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  விஜயேந்திர பிதாரி நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், கைதான இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.  அவர்கள் மீதான   வழக்கை வாபஸ்  பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதில் அளித்த  போலீஸ் சூப்பிரண்டு, கைதானவர்கள் விடுவிக்கப் படுவார்கள் என்று தெரிவித்தார். ஆனால் அதனை பொதுமக்கள்  ஏற்க மறுத்து விட்டனர். இதனால் சுமார் 10 நிமிடம் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.தொடர்ந்து பொது மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால் அலங்காநல்லூரில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து  நடிகர் மயில்சாமி யு- டியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆவேசமாக தன் வாதத்தை முன்வைத்துள்ளார்.

''அலங்கா நல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கனும். நீதியரசர் சொன்னதற்காக தமிழ்நாட்டு மக்கள் அதனை மதித்து தங்கள் உரிமைக்காக போராடி வருகின்றனர். தமிழன் என்ற முறையில் பேசுகிறேன். இந்தியனாக எனக்கு ஓட்டுரிமை இருக்கிறது. இந்தியக் குடிமகன் தனது உரிமையை எங்கு வேண்டுமானாலும் பேசலாம். அந்த நீதிமன்ற உத்தரவுக்கு இந்தியாவே தலை குனிய வேண்டும். இந்தியனாக தலை குனிய வேண்டும். முக்கியமாக தமிழக அரசு ரொம்பவே தலை குனியனும்.

மக்கள் இவ்வளவு பெரிய போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். அரசு ஆறுதல் கூட கூற வேண்டாமா?.  முனுசாமி விமர்சித்தால் 10 நிமிடத்தில் அவரிடம் பேசுகிறீர்கள். ஆனால் சோறு தண்ணியில்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் போராடுகின்றனர். அரசு தரப்பில் இருந்து யாராவது ஒருத்தர் வந்து பேசுறீங்களா? யாருக்கு எது நடந்தா என்னன்னு இருக்காதீங்க அரசியல்வாதிகளே. செத்தா ஒட்டுத்துணி கூட உடன் வராது. வெள்ளைக்காரன் காலத்துல இருந்தே ஜல்லிக்கட்டு இருக்குது. பாலியல் தொழிலுக்கு அனுமதி இருக்குது. ஆனா ஒரு விளையாட்டுக்குத் தடை விதிச்சா என்ன அர்த்தம்?

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


மேலும் செய்திகள்