சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுச்சி போராட்டம்; இலவச உணவு, டீ, பிஸ்கெட் வினியோகம் களை கட்டியது

சென்னை மெரினாவில் கொட்டும் பனியில், கொளுத்தும் வெயிலில் 50 ஆயிரம் பேர் திரண்டு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2017-01-18 22:44 GMT

சென்னை,

அவர்களுக்கு இலவசமாக உணவு, டீ, பிஸ்கெட், தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.

விசுவரூபம் எடுத்தது ஜல்லிக்கட்டு போராட்டம்

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் நேற்று முன்தினம் காலை சிறிய அளவில் ஆரம்பமானது. ஆனால் மாலைக்குள் விசுவரூபம் எடுக்க தொடங்கியது. நேற்று இந்த போராட்டம் புதிய பரிணாமம் கண்டது.

சாதி, மதம், அரசியல் சாயம் எதுவும் இல்லாமல் ‘தமிழன்’ என்ற உணர்வில் தொடர்ந்து போராட்ட களத்தில் இறங்கிய பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரின் ஒரே எண்ணம் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும், தமிழர்களின் கலாசாரம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே ஆகும்.

இதனை வலியுறுத்தியே சென்னை மெரினாவில் அவர்கள் அனைவரும் ஒன்று கூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் கோ‌ஷங்களை எழுப்பினர்.

சிறு அசம்பாவிதமும் இல்லை

எப்போதும் போல குறிப்பிட்ட நேரத்துக்கு பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்து சென்று விடுவார்கள் என்று தான் பல்வேறு தரப்பினரும் நினைத்தனர்.

ஆனால் இரவு நேரத்திலும் கூட இளைஞர்களின் எழுச்சியும், போராட்டத்தில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியது.

இதனால் அசம்பாவிதம் எதுவும் நேராமல் இருக்க போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். ஆனால் பாதுகாப்புக்கு வந்த போலீசாரே ஆதரவு தருகின்ற வகையில் சிறு அசம்பாவிதமும் இல்லாமல் தங்களின் கலாசாரத்தை காப்பாற்ற அறவழியிலான போராட்டத்தை இளைஞர்கள் நடத்தியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

உணவு வினியோகம்

நாள் முழுவதும் போராடும் இளைஞர்களுக்கு, இளம்பெண்களுக்கு தனிநபர்கள் பலர் தாங்களாக முன்வந்து தேவையான உதவிகளை செய்தனர்.

சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த போராட்டத்தில் தண்ணீர் மற்றும் உணவின் தேவையை கருதி அதை பூர்த்தி செய்யும் வகையில் ஏராளமான பிஸ்கெட், ரொட்டி பாக்கெட்டுகளை நல்லுள்ளம் கொண்டவர்கள் பலர் தாராளமாக கொடுத்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

குடும்பமாக போராட்டத்துக்கு வந்திருந்த பெண்களும் 20 முதல் 30 பேர் சாப்பிடக்கூடிய அளவிலான உணவை கொண்டு வந்து மற்றவர்களுக்கு வழங்கினர். இதே போன்று மெரினா கடற்கரை பகுதியையொட்டிய இடங்களில் இருந்து பல பெண்கள், தங்கள் வீடுகளில் தயாரிக்கப்பட்ட உணவுகளை பொட்டலங்களாக எடுத்து வந்து வழங்கினர். இட்லி, டீ, பிஸ்கெட் என பல வகையான உணவுப்பொருட்களும் போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்டன.

உணவை சாப்பிட்ட இளைஞர்கள் கூட்டத்தில் உள்ளவர்களை பார்த்து ‘அக்கா நீங்க சாப்பிட்டீங்களா, அண்ணா நீங்க சாப்பிட்டீங்களா’ என்று ஒவ்வொருவரையும் கேட்டு சாப்பிடாதவர்களுக்கான உணவை தேடி வந்து கொடுத்தனர்.

இந்த போராட்டத்தில் சமூக வலைத்தளங்களின் பங்கு முக்கிய இடம்பெற்றது.

போராட்டத்தில் கலந்துகொண்ட ‘எத்தனை பேருக்கு உணவு, தண்ணீர் வேண்டுமானாலும் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்’ என்பது போன்ற குறுஞ்செய்திகள் வாட்ஸ் அப்பில் வலம் வந்த வண்ணம் இருந்தன.

கேரட் மூட்டைகள்

நேற்று அதிகாலை கோயம்பேடு காய்கறி வியாபாரி ஒருவர் இரண்டு மூட்டை கேரட்டை அங்கு கொண்டுவந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் தானாகவே கொடுத்து சென்றார்.

இவரை போலவே பலரும் தங்களால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்த வண்ணம் இருந்தனர். தங்களுக்கு கிடைத்த பிஸ்கட், தண்ணீர் பாக்கெட்டுகளை பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசாருக்கும் இளைஞர்கள் கொடுத்தனர்.

25 ஆயிரம் இட்லி வினியோகித்தவர்

திருவல்லிக்கேணியை சேர்ந்த சதீஷ்குமார், போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு தனது லோடு வேன் மூலம் இலவசமாக இட்லிகளை எடுத்து வந்து தொடர்ந்து சப்ளை செய்தார்.

இதுபற்றி அவரிடம் கேட்டபோது அவர், ‘‘காலையில் இருந்து 15–வது முறையாக இப்போது இட்லி கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் குறைந்தது 2 ஆயிரம் இட்லி முதல் 2 ஆயிரத்து 500 இட்லி வரை எடுத்து வந்தேன். நண்பர்கள் குழுவாக சமைத்து தருகின்றனர். அது மட்டுமல்ல, அவர்கள் அக்கம்பக்கத்தில் இருந்து இட்லி மற்றும் பிற உணவுப்பொருட்களை சேகரித்து தருகின்றனர். 25 ஆயிரம் இட்லிகள் வினியோகம் செய்திருக்கிறோம். இது தொடரும். எங்களது ஒரே நோக்கம், இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதுதான்’’ என்று கூறினார்.

மதியம் நேரம் ஆக ஆக வெயில் அதிகரித்தது. அப்போது தன்னார்வ தொண்டர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளிகளில் தண்ணீர், பிஸ்கெட் வழங்கிக்கொண்டே இருந்தனர்.

இன்னொரு பக்கம் புதிது புதிதாக அந்த பகுதியில் தற்காலிக கடைகளும் முளைத்தன. அவை டீ, காபி, சிற்றுண்டி விற்பனையில் ஈடுபடுவதை காண முடிந்தது.

அறவழியிலான போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி மயிலாப்பூர் துணை கமி‌ஷனர் பாலகிருஷ்ணன் ஒலிபெருக்கியின் மூலம் எச்சரித்தார்.

ஆனால் இளைஞர்கள் எதற்கும் அஞ்சாமல் முதல்–அமைச்சர் நேரில் வந்து உறுதியான பதில் தரும் வரையில் எங்களது அறவழியிலான போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.

இந்த போராட்டத்துக்கு மூதாட்டிகள், குடும்பதலைவிகள் என பலரும் தங்களது குழந்தைகளுடன் கொட்டும் பனியிலும் வந்து கலந்து கொண்டதை இளைஞர்கள் பலரும் கரகோ‌ஷம் எழுப்பி வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

முதல்–அமைச்சர்

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருமே எழுச்சியுடன் காணப்பட்டதால் அரசாங்கமோ, போலீசாரோ பேச்சுவார்த்தைக்கு குறிப்பிட்ட சிலரை அழைக்கும் போது அதை இளைஞர்கள் ஏற்க மறுக்கின்றனர்.

அவ்வாறு பேச்சுவார்த்தைக்கு சென்று வந்தவர்களின் வார்த்தைகளையும் அவர்கள் காது கொடுத்து கேட்பதில்லை.

அவர்களின் ஒரே கோரிக்கை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போராட்ட களத்துக்கு வரவேண்டும், ஜல்லிக்கட்டு குறித்து உறுதியான தகவலை தரவேண்டும். அதுவரையில் போராட்டம் தொடரும் என்பதாக இருந்தது.

மேலும் செய்திகள்