வாக்கெடுப்பு குறித்து காங்கிரசின் முடிவு நாளை தெரிவிக்கப்படும்: திருநாவுக்கரசர்

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து தமிழக காங்கிரசின் முடிவு நாளை தெரிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Update: 2017-02-17 14:03 GMT
சென்னை,

தமிழக முதல் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமியை 15 நாட்களுக்குள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் கவர்னர் வித்யாசகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, எடப்பாடி பழனிசாமி, மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக நாளை சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. நாளை நடைபெறும் சிறப்புக்கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக  எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து வாக்களிப்பார்கள் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. 

இதேபோல், திமுக கூட்டணி கட்சியான காங்கிரசும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்து இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பெயரில் இயங்கி வரும் டுவிட்டர் கணக்கிலும் இந்த தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், திருநாவுக்காரசர் முதலில் வெளியான செய்தியை மறுத்து இருக்கிறார். இது குறித்து திருநாவுக்கரசர் கூறும் போது, ”  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காங். வாக்களிக்கும் என சமூகவலைத்தளத்தில் வெளியான தகவல் தவறானது. ட்விட்டரில் எனக்கு அதிகாரப்பூர்வ கணக்கு கிடையாது, பயன்படுத்தவும் தெரியாது. ட்விட்டரில் நான் பதிவிட்டதாக வந்த செய்தி தவறானது, தலைமையின் முடிவுக்கு ஏற்ப எம்எல்ஏக்கள் செயல்படுவார்கள்
 
காங். தலைமை அளிக்கும் ஆலோசனையின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள். நாளை காலை 9 மணிக்கு மீண்டும் காங். எம்எல்ஏக்கள் கூட்டம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்