மாத இறுதியில் துவரம் பருப்பு, பாமாயில் கிடைக்கும் அமைச்சர் செல்லூர் ராஜு உறுதி

மாத இறுதியில் அனைவருக்கும் தட்டுப்பாடு இன்றி துவரம் பருப்பு, பாமாயில் கிடைக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.

Update: 2017-03-03 22:45 GMT
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் சரஸ்வதி நகரில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரிவர பொருட்கள் வழங்கப்படுவது இல்லை என்று கூறி நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ரேஷன் கடையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து நேற்று காலை அந்த ரேஷன் கடையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ஆய்வு செய்தார். கடையில் உள்ள பொருட்களின் இருப்பு விவரம், எடை எந்திரம் உள்ளிட்டவைகள் குறித்து அவர், ரேஷன் கடை ஊழியரிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது:-

டெண்டர் நடவடிக்கையால் தாமதம்

ரேஷன் கடையில் பதிவேடுகளில் உள்ள தகவல்களையும், பொதுமக்களிடமும் விசாரித்த போது கடந்த 2 மாதங்களாக பாமாயில், துவரம் பருப்பு வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை தொடர்பான டெண்டர் நடவடிக்கைகளில் ஏற்பட்ட காலதாமதமே இதற்கு காரணம்.

உடனடியாக இதற்கான டெண்டர் விடப்பட்டு, இந்த மாத இறுதியில் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு இல்லாமல் அனைவருக்கும் கிடைக்கும்.

80 சதவீதம்

தி.மு.க. ஆட்சியில் 30 முதல் 40 சதவீதம்தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. தற்போது 70 முதல் 80 சதவீதம் வரை ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. தற்போதைய அரசு, ஏழை பொதுமக்கள் யாரும் பட்டினியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக 100 சதவீதம் இலவச அரிசி வழங்கி வருகிறது.

ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்களை தரவில்லை என்றால் 24 மணி நேரமும் இயங்கும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் செய்யும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

நடவடிக்கை

அதேபோல் பொதுமக்கள், பொருட்கள் வாங்காமலேயே வாங்கியதாக செல்போனில் குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்.) வந்தாலோ, ரேஷன் பொருட்கள் வழங்குவதில் குளறுபடி உள்ளிட்டவைகள் குறித்தோ புகார் தெரிவித்தால் அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பொதுமக்கள், அந்த ரேஷன் கடை ஊழியரை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறினர். அதற்கு அமைச்சர், அதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஞானசேகரன், இணை பதிவாளர்கள் சித்ரா, செந்தில்குமார், பகுதி செயலாளர் கே.கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்