அதிமுக தலைமை அலுவலகத்தை சசிகலா தரப்பு பயன்படுத்த ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு

அதிமுக தலைமை அலுவலகத்தை சசிகலா தரப்பு பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்த ஓ.பன்னீர்செல்வம் அணி திட்டமிட்டு உள்ளது.

Update: 2017-03-23 03:37 GMT
சென்னை,

முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கவேண்டும் என்று இரண்டு அணியினரும் டெல்லி சென்று தலைமை தேர்தல் கமிஷனரிடம் மனு அளித்தனர்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக தேர்தல் கமிஷன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரையும், சசிகலா தரப்பினரையும் நேற்று நேரில் அழைத்து விசாரணை நடத்தியது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் கமிஷன், அவர்கள் தெரிவித்த கருத்துகள் பற்றி நீண்ட நேரம் ஆலோசித்தது. பின்னர், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கோ அல்லது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கோ ஒதுக்குவது இல்லை என்றும், அந்த சின்னத்தை முடக்கி வைப்பது என்றும் முடிவு செய்தது.

இந்த தகவல் நேற்று இரவு 11 மணிக்கு இரு அணியினருக்கும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அ.தி.மு.க. என்ற கட்சியின் பெயரை இரு அணியினரும் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டு உள்ளது.

ஓபிஎஸ் அணி அடுத்த திட்டம்

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தை சசிகலா தரப்பு பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்த பன்னீர்செல்வம் அணி திட்டமிட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இரு அணியாக பிரிந்த பின்னர் அதிமுக ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தை சசிகலா தரப்புதான் பயன்படுத்தி வந்தது. இப்போது அதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் எதிர்ப்பு எழுந்து உள்ளது. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எதிர்பால் கட்சியின் சின்னம் மற்றும் பெயரை பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தை சசிகலா தரப்பு பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு திட்டமிட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்