நேரம் கூடி வரும்போது சந்திப்போம் இலங்கை தமிழர்களே - ரஜினிகாந்த்

இலங்கை தமிழர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன், நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என ரஜினிகாந்த் கூறிஉள்ளார்.

Update: 2017-03-29 04:20 GMT
சென்னை,

இலங்கையில் லைக்கா நிறுவனம் சார்பில் ஈழத்தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை ஏற்று ரஜினிகாந்த் இலங்கை செல்ல இருந்தார். ஆனால் இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்களில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து இலங்கை செல்லும் பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தார். இந்த நிலையில் ரஜினிகாந்தின் வருகையை அரசியல் ஆக்கியதற்கு கண்டனம் தெரிவித்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலின் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இதில் வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வீடுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த் வரவேண்டும், ரஜினிகாந்தின் வருகையை அரசியல் ஆக்கவேண்டாம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் வைத்திருந்தனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன், நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. நல்லதையே நினைப்போம், நல்லதே நடக்கும், நேரம் கூடி வரும் போது சந்திப்போம். நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்,” என தெரிவித்து உள்ளார். 

மேலும் செய்திகள்