கடந்த 10 ஆண்டுகளில் பத்திரிகை விற்பனை; 2.37 கோடி உயர்வு ‘‘ஏபிசி’’ தணிக்கை நிறுவனம் தகவல்

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் தினசரி பத்திரிகைகளின் விற்பனை 2 கோடியே 37 லட்சம் பிரதிகள் உயர்ந்துள்ளதாக ஆடிட் பீரோ ஆப் சர்க்குலே‌ஷன் அறிவித்துள்ளது.

Update: 2017-05-09 21:07 GMT

சென்னை,

இந்தியா முழுவதிலும் பத்திரிகைகளின் விற்பனையை கணக்கிட ஆடிட் பீரோ ஆப் சர்க்குலே‌ஷன் என்ற சுதந்திரமான அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஏபிசி என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு 1948–ம் ஆண்டு தொடங்கி கடந்த 69 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பத்திரிகைகளின் விற்பனையை இந்த அமைப்பு கணக்கிடும். ஜனவரி முதல் ஜூன் வரை ஒரு கால அளவாகவும், ஜூலை முதல் டிசம்பர் வரை மற்றொரு கால அளவாகவும் நிர்ணயித்து, ஆண்டுக்கு 2 முறை பத்திரிகை விற்பனை கணக்கிடப்படுகிறது.

பத்திரிகைகளின் வளர்ச்சி

இந்த அமைப்பில் தினசரி பத்திரிகைகள், வாராந்திர பத்திரிகைகள் 910–ம், மேகசீன் என்ற பருவ இதழ்கள், ஆண்டு இதழ்கள் 57–ம் சேர்த்து மொத்தம் 967 பத்திரிகைகள் உறுப்பினர்களாக உள்ளன. உறுப்பினர்களாக உள்ள பத்திரிகைகளின் விற்பனையை மட்டும் இந்த அமைப்பு கணக்கிடும்.

டி.வி.க்கள், ரேடியோ, இணையதளம் உள்பட மற்ற ஊடகங்கள் போட்டியாக இருக்கும் நிலையிலும்கூட, பத்திரிகைகளின் வளர்ச்சி அமோகமாக இருப்பதாக இந்த அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. இதற்கு காரணம், கல்வி அறிவு உயர்வு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தினசரி பத்திரிகைகளை படிக்கும் பழக்கம்.

வீடுகளுக்கே பத்திரிகை வருவது, குறைந்த விலையில் செய்திகளை அறியும் வசதி, சரியான மற்றும் நம்பத்தகுந்த செய்திகளை வழங்குவது ஆகியவையும் பத்திரிகை எண்ணிக்கை உயர்வுக்கு காரணமாக உள்ளன.

விற்பனை உயர்வு

2006–ம் ஆண்டு 3 கோடியே 91 லட்சம் என்றிருந்த தினசரி பத்திரிகைகளின் விற்பனை, கடந்த 10 ஆண்டுகளில் 6 கோடியே 28 லட்சமாக உயர்ந்துள்ளது. அதுபோல 2006–ம் ஆண்டு 659 என்ற அளவில் இருந்த இந்திய பத்திரிகைகளின் எண்ணிக்கை தற்போது 910 ஆக உயர்ந்துள்ளது.

இந்தி பத்திரிகைகள் விற்பனை 8.76 சதவீத வளர்ச்சியையும், தெலுங்கு பத்திரிகைகள் 8.28 சதவீதம், கன்னட பத்திரிகைகள் 6.40 சதவீதம், தமிழ் பத்திரிகைகள் 5.51 சதவீதம், மலையாள பத்திரிகைகள் 4.11 சதவீதம், ஆங்கில பத்திரிகைகள் 2.87 சதவீதம் என விற்பனையில் வளர்ச்சியை அடைந்துள்ளன.

‘தினத்தந்தி’

பத்திரிகை விற்பனையில் முதல் 10 பத்திரிகைகளில், தமிழில் ‘தினத்தந்தி’க்கு மட்டும் இடம் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பத்திரிகை விற்பனை குறைந்து கொண்டுவரும் நேரத்தில், இந்தியாவில் பத்திரிகை விற்பனை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்