ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா விவகாரம் முதல்வரின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை -மு.க.ஸ்டாலின்

ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா விவகாரம் தொடர்பாக முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

Update: 2017-06-19 08:13 GMT
சென்னை

ஏப்ரல் 12 ஆம் தேதி  நடைபெறவிருந்த ஆர்.நகர். தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிட்ட தினகரனுக்கு வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்குத் தலா 4000 ரூபாய்  வீதம் பணம் கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதற்கு பல ஆதாரங்களும் கிடைத்த நிலையில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.

இந்தநிலையில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் ஒருவருக்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் பணம் விநியோகித்தது தொடர்பாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக காவல்துறைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில்  இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, மு.க.ஸ்டாலினை பேச விடாததால் திமுக  உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணைய பரிந்துரைப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டதா எனக் கேள்வி எழுப்பினார்.

இதை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா மற்றும் வழக்கு தொடர்பாக விளக்கம் அளித்தார்.முதல்வரின் விளக்கத்தை கேட்டு திமுக எம்.எல்.ஏக்கள், முதல்வரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து சட்டசபை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

முதலமைச்சர் பழனிசாமியின் பதில் திருப்தி அளிக்கவில்லை.தேர்தல் ஆணையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்று கேட்டதற்க்கு புலன் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக முதலமைச்சர் பதில் அளித்தார்.யார் மீது வழக்குப்பதிவு என்ற விவரத்தை முதலமைச்சர் அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்