ராஜீவ்காந்தி கொலை கைதி விடுதலை செய்யப்படுவாரா? நிர்மலா சீதாராமன் பேட்டி

ராஜீவ் கொலை கைதி விடுதலை பற்றி மத்திய அரசு தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க முடியாது என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

Update: 2017-06-24 00:00 GMT
திருச்சி,

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படுவது உறுதி. எந்த இடத்தில் இந்த மருத்துவமனை அமைக்கப்படவேண்டும் என்பது பற்றி தமிழக அரசு கோர்ட்டில் தாக்கல் செய்து இருக்கும் தகவல் தொடர்பாக நான் பதில் அளிக்க முடியாது. எய்ம்ஸ் மருத்துவமனையை செங்கிப்பட்டியில் தான் அமைக்கவேண்டும் என ஒரு சாராரும், மதுரையில் தான் அமைக்கவேண்டும் என இன்னொரு சாராரும் கேட்டு அதற்கான அழுத்தத்தை கொடுக்கிறார்கள். இதுபோன்ற பல காரணங்களால் தாமதம் ஏற்படுகிறது.

தமிழகத்தில் எந்த இடத்தில் இந்த மருத்துவமனை அமைக்கப்படவேண்டும் என்பதை தமிழக அரசு, இதற்காக அமைக்கப்பட்ட தொழில் நுட்ப குழு ஆகியவற்றுடன் கலந்து பேசி மத்திய அரசு விரைவில் அறிவிப்பை வெளியிடும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அடைந்த ராபர்ட் பயாஸ் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் விடுதலை செய்யாமல் சிறையில் அடைத்து வைத்து இருப்பதால் தன்னை கருணை கொலை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசிடம் மனு கொடுத்து இருப்பதாகவும், தமிழக சட்டசபையில் இதுபற்றி விவாதம் நடத்தப்பட்டதாகவும், இதில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என கேள்வி கேட்கப்படுகிறது.

ராபர்ட் பயாஸ், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஒரு கைதி. அவரது கருணை மனு ஜனாதிபதியால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் உள்ளவர் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்கிறார். இந்த வழக்கு சட்ட நுணுக்கங்கள் மற்றும் மனித உரிமைகள் சம்பந்தப்பட்டது. எனவே மத்திய அரசு இதில் தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க முடியாது. மத்திய, மாநில அரசுகள் பேசி தான் முடிவு எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்