பாராளுமன்ற கூட்டத்தொடரில் குட்கா விவகாரம், மீனவர்கள் பிரச்சினை குறித்து நிச்சயம் பேசுவேன்
பாராளுமன்ற கூட்டத்தொடரில் குட்கா விவகாரம், தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து நிச்சயம் பேசுவேன் என்று டாக்டர் மைத்ரேயன் எம்.பி. தெரிவித்தார்.;
சென்னை,
பாராளுமன்ற கூட்டத்தொடரில் குட்கா விவகாரம், தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து நிச்சயம் பேசுவேன் என்று டாக்டர் மைத்ரேயன் எம்.பி. தெரிவித்தார்.
முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் சென்னை மயிலாப்பூர் 173–வது வட்டத்தில் புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான உதவி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. அதை அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியை சேர்ந்த டாக்டர் மைத்ரேயன் எம்.பி. நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.டாஸ்மாக் மற்றும் கதிராமங்கலம் பிரச்சினை ஆகியவற்றில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி மக்களோடு மக்களாக துணை நிற்கும். எந்த ஒரு விசாரணைக்கும் ஒரு காலக்கெடு இருக்கும். அந்தவகையில் குட்கா தொடர்பாக விசாரணை சரியாக நடக்கவில்லை என்றால், அடுத்த வாரத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடர் கூடுகிறது. அதில் நிச்சயமாக குட்கா விவகாரம் தொடர்பாக பேசுவேன். இது மக்களின் உயிரோடு விளையாடக்கூடிய பிரச்சினை.
இந்த பிரச்சினையில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் ஒரு டாக்டர். அந்தவகையில் இது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை ஆக இருக்கிறது. அதேபோல், இதில் சம்பந்தப்பட்டு இருக்கும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது.மேலும் தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை பாராளுமன்றத்தில் அந்த அரசாங்கம் புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. அந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறோம். அதுதொடர்பாக பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிச்சயமாக நான் பேசுவேன். எடப்பாடி பழனிசாமி அணியிடம் தார்மீக அடிப்படையில் எதையும் எதிர்பார்க்க முடியாது. சட்டப்படி தான் அவர்களை எதிர்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.