கதிராமங்கலம் பிரச்சினைக்கு தமிழக அரசுதான் காரணம்

கதிராமங்கலம் பிரச்சினைக்கு தமிழக அரசுதான் காரணம் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2017-07-09 23:52 GMT
கன்னியாகுமரி,

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவு, வேண்டும் என்றே நடந்த விஷயம் அல்ல. அது திடீர் விபத்து. அதை பொதுமக்களும் புரிந்து கொண்டு உள்ளனர். அதற்கு பின்பு நடந்த சட்டம்- ஒழுங்கு பிரச்சினைதான் பொதுமக்களை கொந்தளிக்க வைத்துவிட்டது. தமிழக அரசுதான் இதற்கு காரணம்.

செம்மொழி பண்பாட்டு மையம் இதுவரை செயல்பட்ட விதம் கேள்வி குறியாகவே உள்ளது. மத்தியில் காங்கிரஸ் அரசும் மாநிலத்தில் தி.மு.க. அரசும் இருந்த போதும் செம்மொழி பண்பாட்டு மையம் செயல்படவில்லை. தற்போதும் அது செயல்படவில்லை. செயல்படாத அந்த அமைப்பை இங்கு வைத்து என்னபயன்?. இதனால், தற்போது அதில் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது. இனியாவது அது செயல்படுகிறதா? என்று பார்ப்போம்.

இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜனதா கட்சியினர் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவங்கள் நடைபெறுகிறது. இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. மாநில அரசு இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இந்து இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். இல்லை எனில் இது கலவரமாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

கடந்த 6 ஆண்டில் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு நல்லமுறையில் உள்ளதாக சட்டசபையில் கூறி உள்ளார்கள். இது தொடர்பான பட்டியலை எடுத்துப்பார்த்தால் உண்மை தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்