எடப்பாடி பழனிசாமி அணியில் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., இணைந்தார்

எடப்பாடி பழனிசாமி அணியில் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. இணைந்தார். இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Update: 2017-07-23 22:45 GMT

சென்னை,

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் உள்கட்சி பூசல் ஏற்பட்டது. ஜெயலலிதா தோழி சசிகலா தலைமையில் அ.தி.மு.க. அம்மா அணி, முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி என அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது.

ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி முதலாவதாக வந்து இணைந்தார். அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இந்தநிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், ‘தனது தொகுதியான கவுண்டம்பாளையத்தில் அரசு செயல்படுத்திய திட்டங்களுக்காக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்து பேசினார். இதையடுத்து அவர் மீது ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதிருப்தி அடைந்தனர்.

இந்தநிலையில் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்துக்கு சென்றிருந்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., நேற்று காலை சந்தித்து அ.தி.மு.க. (அம்மா) அணியில் இணைந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., விலகியதையடுத்து, அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்களின் பலம் 10 ஆக குறைந்துவிட்டது. அதே நேரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க. அம்மா அணியின் எம்.எல்.ஏ., பலம் 123 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் அவரையும் சேர்த்து எஸ்.செம்மலை, எஸ்.எஸ்.சரவணன், மனோகரன், மாணிக்கம், எஸ்.பி.சண்முகநாதன், மாபா பாண்டிராஜன், ஓ.கே.சின்னராஜ், அருண்குமார், மனோ ரஞ்சிதம் ஆகிய 10 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அ.தி.மு.க. இரு அணிகள் இணையவேண்டும் என்பதே தொண்டர்கள் மற்றும் மக்களின் விருப்பமாகும். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் போனில் பேசினால் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்.

அதற்கான முயற்சியில் நான் ஈடுபடுவேன். ஜனாதிபதி தேர்தலின்போது அவர்கள் இருவரும் அருகருகே இருந்தனர். அவர்களுக்குள் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. தமிழகத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி நடக்கிறது. இனிமேல் அவரது ஆலோசனைப்படி நடப்பேன்.  இவ்வாறு ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்