ஜெயிலில் உண்ணாவிரதம் - மவுனவிரதம்; முருகனுக்கு சிறை சலுகைகள் அனைத்தும் ரத்து

ஜெயிலில் 4-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகன் நேற்றிலிருந்து மவுனவிரதத்தையும் தொடங்கி உள்ளார். அவரை 3 பேர் கொண்ட டாக்டர் குழுவினர் சந்தித்து பரிசோதித்தனர்.

Update: 2017-08-21 22:15 GMT

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அடைந்து வேலூர் ஜெயிலில் இருக்கும் முருகன், ஜீவசமாதி அடைவதற்காக உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.

கைதியாக இருக்கும் முருகன் உணவு உண்ண மறுப்பது சிறை விதியை மீறிய செயல் என்பதால் அவர் மீது சிறைத்துறையினர் சிறை சலுகைகளை ரத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி முதல்கட்டமாக முருகன் தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை 3 மாதங்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் முருகன் நேற்றிலிருந்து யாரிடமும் பேசாமல் மவுன விரதத்தையும் மேற்கொண்டுள்ளார்.

தொடர் உண்ணாவிரதத்தில் முருகன் ஈடுபட்டுள்ளதால் சோர்வாக காணப்படுகிறார். எனவே சிறை மருத்துவ குழுவினரின் தீவிர கண்காணிப்பில் முருகன் உள்ளார். நேற்று வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சாந்தி தலைமையிலான குழுவினர் ஜெயிலுக்கு சென்று முருகனை பரிசோதனை செய்தனர். அவரது மனநிலை குறித்தும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முருகன் 4-வது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதால் அவருக்கு சிறையில் கைதிகள் அனுபவிக்கும் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜெயில் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

அதன்படி, முருகன் தனது மனைவி மற்றும் உறவினர்கள் அவரை சந்தித்து பேச முடியாது. வாரம் ஒருமுறை ஜெயிலில் உள்ள போனில் உறவினர்களிடம் பேசும் சலுகை உள்பட அனைத்து சலுகைகளையும் இழந்துள்ளார்.

மேலும் செய்திகள்