சட்டமன்றத்தை கூட்டவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் திருநாவுக்கரசர்

எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தை கூட்டவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று திருநாவுக்கரசர் கூறினார்.

Update: 2017-09-10 20:45 GMT
தென்காசி,

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தென்காசியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்கனவே சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்று கோரி கவர்னரிடம் மனு கொடுத்து உள்ளோம். மேலும் ஜனாதிபதியிடமும் இதுதொடர்பாக மனு கொடுத்து இருக்கிறோம். 22 எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் இருந்து கர்நாடகத்துக்கு சென்று விட்டனர்.

இந்த ஆட்சி பெரும்பான்மை இல்லாத ஆட்சி என்று மக்களுக்கும் தெரியும். முதல்வராக இருப்பதற்கும், முக்கிய முடிவுகள் எடுப்பதற்கும் இந்த ஆட்சியாளர்களுக்கு தார்மீக உரிமை இல்லை. அவர்கள் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தொடர வேண்டும். தற்போது பெரும்பான்மை இல்லை என்று கவர்னருக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும். ஆளும் கட்சி பிரிந்து கிடக்கிறது.

சட்டமன்றத்தை கூட்டவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். தி.மு.க. பெரும்பான்மையை நிரூபிக்க கேட்டு சட்டமன்றத்தை கூட்டினால் டி.டி.வி.தினகரன் நிலை என்ன என்பதை அவர்தான் முடிவு செய்வார். ஒவ்வொரு கட்சியும் என்ன முடிவு எடுக்கும் என்பதை நான் கூற இயலாது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற்றார். ஆனால் இதை எடப்பாடி பழனிசாமி அரசால் பெற முடியவில்லை. மத்திய அரசை கண்டு பயப்படுகிறார்கள். அரசும், முதல்வரும் பலவீனமாக உள்ளனர். மக்களுக்கு நன்மை செய்யாத இந்த அரசு அகற்றப்பட வேண்டும்.

வருகிற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி என்று அ.தி.மு.க. அறிவிக்கும் நிலை உள்ளது. பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. விவசாய பிரச்சினைகளுக்காக ரூ.50 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டு முதல்வர் இரண்டு முறை பிரதமரை சந்தித்தார். ஆனால் ஒரு பைசா கூட தரப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்