‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட மலைவாழ் குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களின் வாழ்வாதார நிவாரண தொகையாக குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் வழங்க முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2017-12-15 22:00 GMT

சென்னை,

இதுகுறித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கன்னியாகுமரி மாவட்டம் சமீபத்தில் ஏற்பட்ட ‘ஒகி’ புயலினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு எடுத்த போர்க்கால நடவடிக்கைகளின் காரணமாக, மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகள் சீரமைக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

பாதிக்கப்பட்ட மீனவர் மற்றும் மீனவர் அல்லாத குடும்பங்களுக்கு ஜெயலலிதாவின் அரசால் உரிய நிவாரணம் அறிவிக்கப்பட்டு, உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் பல்வேறு நிவாரணம் மற்றும் இழப்பீட்டுத் தொகை தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், திருவட்டார், பேச்சிப்பாறை, தோவாளை, தடிக்காரன்கோணம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் கடையால், பொன்மனை ஆகிய பேரூராட்சிகளில் உள்ள 1,524 மலைவாழ் குடும்பங்கள் ‘ஒகி’ புயலால் தாங்கள் தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. தங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் விடுத்த கோரிக்கை என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களின் வாழ்க்கைச் சூழலையும், அவர்கள் தற்போது எந்தவிதமான தொழிலையும் செய்ய முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார நிவாரண தொகையாக குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்