‘ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் கொண்டு வரப்பட்டார்’ டாக்டர் பிரதாப் ரெட்டி தகவல்

சட்டம்–ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்கவே உண்மையை வெளியிடவில்லை என்றும் அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.

Update: 2017-12-16 22:30 GMT

சென்னை,

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ குழந்தைகள் நல மருத்துவமனையில், இன்னோவா ஸ்பேஸ் நிறுவனத்துடன் அப்பல்லோ டெலி சர்வீசஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி தலைமை தாங்கினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அப்பல்லோ தொலை மருத்துவ சேவைகள் இயக்குனர் பேராசிரியர் கே.கணபதி, இன்னோவா ஸ்பேஸ் நிறுவன இயக்குனர் டாக்டர் தயாஸ் ருசமானோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டியிடம், ஜெயலலிதா மரணம் தொடர்பான கேள்விகளை நிருபர்கள் எழுப்பினார்கள். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– ஜெயலலிதா சுவாசம் இல்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக டாக்டர் பிரீத்தா ரெட்டி கூறி இருக்கிறாரே?

பதில்:– ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடந்து கொண்டு இருப்பதால் இதை பற்றி இப்போது பேச முடியாது. மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் இருந்தார்.

கேள்வி:– விசாரணை ஆணையத்தில் இருந்து உங்களுக்கு சம்மன் எதுவும் வந்திருக்கிறதா?

பதில்:– எனக்கு தற்போது வரை சம்மன் வரவில்லை. எங்களுடைய மருத்துவமனை டாக்டர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டது குறித்து எனக்கு தெரியாது. சம்மன் கிடைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது தகுந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கேள்வி:– விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கைக்கும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது வெளியான பத்திரிகை தகவல் அறிக்கைக்கும் வித்தியாசம் இருக்கிறதே?

பதில்:– மக்கள் பதற்றமடையக்கூடாது என்பதற்காகவும், சட்டம்–ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்கவுமே உண்மையான நிலையை குறிப்பிடாமல், ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்ற செய்தி அறிக்கை வெளியிடப்பட்டது.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

மேலும் செய்திகள்