ஆந்திராவில் 5 தமிழர்கள் பலி: சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

Update: 2018-02-25 22:16 GMT

சென்னை,

தனது குடும்ப வறுமையைப் போக்கக் கூலிக்கு மரம்வெட்டச் சென்ற அப்பாவித் தமிழகக் கூலித்தொழிலாளர்கள் 3,000–க்கும் மேற்பட்டோர் ஆந்திரச் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைப்படுத்தப்படும் செய்தியானது தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. அவர்களை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காது கள்ளமெளனம் சாதிக்கும் தமிழக அரசின் செயலானது வன்மையானது கண்டனத்திற்குரியதாகும்.

அண்மையில் ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தின் ஒண்டிமிட்டா ஏரியில் 5 தமிழர்களின் உடல்கள் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டது. ஆந்திராவிற்குக் கூலிக்கு மரம் வெட்டச் செல்லும் அப்பாவிக்கூலித் தொழிலாளர்களைக் கைது செய்து சித்ரவதை செய்வது, சுட்டுக்கொலை செய்வது போன்றவற்றின் நீட்சியே இந்நிகழ்வாகும்.

இது நடந்து ஒரு வாரமாகியும் இதுவரை இதற்குரிய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தமிழக அரசானது இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு ஆந்திரச் சிறைகளில் வாடும் 3000–க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும், ஏரியில் பிணங்களாகக் கண்டெடுக்கப்பட்ட 5 பேரின் மரணத்திற்கும் மத்தியப் புலனாய்வு(சி.பி.ஐ.) விசாரணைக்கு வழிசெய்து, இறந்து போனவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தர வேண்டும்.

மேலும் ஆந்திராவில் கூலிவேலைக்குச் செல்லும் தமிழகத் தொழிலாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தர முன்வர வேண்டும் எனவும் தமிழக அரசைக் கோருகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்