ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவர் மேல்முறையீடு செய்தாலும் பணி நீக்கம் செய்யலாம்

ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவர் மேல்முறையீடு செய்தாலும் பணிநீக்கம் செய்யலாம் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

Update: 2018-03-17 21:00 GMT
சென்னை, 

அரியலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் எஸ்.பி.சிதம்பரம். இவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அரியலூர் கோர்ட்டு, குற்றம்சாட்டப்பட்ட சிதம்பரத்திற்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2016-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து அவர், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில் அவரை பணிநீக்கம் செய்து பொதுப்பணித்துறை செயலாளர் உத்தரவிட்டார்.

பணி நீக்கம் செய்யலாம்

இந்த உத்தரவை எதிர்த்து சிதம்பரம், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர், “எனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ஐகோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், தன்னை பணிநீக்கம் செய்தது தவறானது” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, “மனுதாரருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை மட்டுமே நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது. மனுதாரர் குற்றவாளி என்று கீழ்கோர்ட்டு தீர்மானித்ததை ஐகோர்ட்டு நிறுத்தி வைக்கவில்லை. சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும் பணி நீக்கம் செய்யலாம். மனுதாரரின் பணிநீக்க உத்தரவில் எந்த சட்ட மீறலும் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்