போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டருடன் நடுரோட்டில் சண்டைபோட்ட வாலிபர்

ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றதால் அபராதம் விதித்ததை எதிர்த்து, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டருடன் நடுரோட்டில் வாலிபர் சண்டைபோட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-03-22 20:11 GMT
ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயபாண்டியன் (வயது 35) மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை வேளச்சேரி 100 அடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேளச்சேரியை சேர்ந்த ராகேஷ் (25) என்பவர் ஹெல்மெட் அணியாமல் வந்ததாக தெரிகிறது.

அவரை தடுத்து நிறுத்திய சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயபாண்டியன், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றதாக கூறி ரூ.100 அபராதம் விதித்து, பணத்தை தரும்படி கேட்டார். இதற்கு ராகேஷ் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயபாண்டியனுக்கும், ராகேஷூக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியது. அப்போது ராகேஷை, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயபாண்டியன் அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுக்கொண்டனர்.

இதை கண்டதும் அந்த வழியாக வாகனங்களில் சென்ற சிலர், ராகேஷூக்கு ஆதரவாக களத்தில் இறங்கி சப்-இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சக போக்குவரத்து போலீசார் வந்து இருதரப்பினரையும் சமரசம் செய்தனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயபாண்டியன், வேளச்சேரி போலீசில் புகார் செய்தார். அதில், தன்னை பணி செய்யவிடாமல் தடுத்து, தகராறு செய்ததாக ராகேஷ் உள்பட சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இருந்தார். இதுபற்றி வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

மேலும் செய்திகள்