கற்பழிப்பு சம்பவத்தில் சிறுமி கர்ப்பம்: கருவை கலைக்க ஐகோர்ட்டு அனுமதி

கற்பழிப்பு சம்பவத்தில் கர்ப்பம் அடைந்த சிறுமியின் கருவை கலைக்க அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-05-04 21:45 GMT
சென்னை,

காஞ்சீபுரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் தலைவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14 வயது சிறுமி சேர்க்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது, சில நாட்களுக்கு முன்பு அவருக்கு தெரிந்த நபர், அவரை கற்பழித்ததாக கூறினார்.

அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படும். எனவே, இந்த கருவை கலைக்க அனுமதிக்கவேண்டும். கரு கலைக்க அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி டி.ராஜா விசாரித்தார். அப்போது அந்த சிறுமி, அவரது தாயார், அந்த சிறுமியை பரிசோதித்த டாக்டர் வி.வனிதா ஆகியோர் நீதிபதிகள் முன்பு ஆஜரானார்கள்.

அந்த சிறுமியின் வயிற்றில் 18 வார கரு இருப்பதாக டாக்டர் கூறினார். அதேபோல, கருவை கலைக்க தங்களுக்கு சம்மதம் என்று அந்த சிறுமியும், அவரது தாயாரும் கூறினர். இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி டி.ராஜா, சிறுமியின் 18 வார கருவை கலைக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்