சென்னை பல்கலைக்கழகம் அருகே மாநில கல்லூரி மாணவர்கள் மோதல்; 2 பேருக்கு கத்திக்குத்து

சென்னை பல்கலைக்கழகம் அருகே மாநில கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.

Update: 2018-05-11 21:02 GMT
சென்னை, 

சென்னை பல்கலைக்கழகம் அருகே மாநில கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த காசிநாதன் என்பவரின் மகன் சுரேஷ்குமார் (வயது 21). இவர் மாநில கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். மணலி புதுநகரை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் மணிகண்டன் (20). இவரும் அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு அரசியல் அறிவியல் படித்து வருகிறார்.

இந்த நிலையில் கல்லூரியில் தேர்வு நடந்தது. மணிகண்டன் மீது புகார்கள் இருந்ததால் அவரை தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. சுரேஷ்குமார் மட்டும் தேர்வு எழுதிவிட்டு வந்தார். அப்போது மணிகண்டன் அவரை சந்தித்தார்.

2 பேரும் அண்ணா சதுக்கம் பஸ் நிலையம் எதிரே சென்னை பல்கலைக்கழகம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அதே கல்லூரியில் படிக்கும் 2 மாணவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் சுரேஷ்குமார் மற்றும் மணிகண்டனோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த மாணவர்கள் மணிகண்டனையும், சுரேஷ்குமாரையும் கத்தியால் குத்தினர். இதில் மணிகண்டனுக்கு தலையிலும், சுரேஷ்குமாருக்கு கையிலும் கத்திக்குத்து விழுந்தது. அதைத்தொடர்ந்து அந்த நபர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

தகவல் அறிந்த அண்ணா சதுக்கம் போலீசார் காயம் அடைந்த மணிகண்டன், சுரேஷ்குமார் ஆகிய 2 பேரையும் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2 பேரும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே திருவல்லிக்கேணி போலீஸ் உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் மாநில கல்லூரிக்கும் சென்று விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் குறித்து கத்திக்குத்து காயம் அடைந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது, “கத்தியால் குத்திய மாணவர்கள் எங்கள் கல்லூரியில் படிப்பவர்கள். ஆனால் அவர்களது பெயர் விவரம் தெரியாது” என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மாணவர்களை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்