திண்டுக்கல்லில் ஆலங்கட்டி மழை கொடைக்கானலில் காட்டாற்று வெள்ளத்தில் பெண் பலி

திண்டுக்கல்லில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது. கொடைக்கானலில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பெண் பலியானார்.

Update: 2018-05-12 22:15 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்று வீச தொடங்கியது. பின்னர் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

திண்டுக்கல் நகரை பொறுத்தவரை கடந்த 2012-ம் ஆண்டு தான் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தான் திண்டுக்கல் நகர் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சிறுவர்-சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் ஆலங்கட்டிகளை கைகளில் எடுத்து பார்த்து மகிழ்ந்தனர்.

சூறாவளி காற்று வீசியதால் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் திருச்சி செல்லும் ரெயில் பாதையில் உள்ள ரெயில்வே கேட், பலத்த காற்றுக்கு சாய்ந்து அந்த வழியாக சென்ற மின்சார வயர் மீது உரசியபடி நின்றது. இதையடுத்து விரைந்து வந்த ரெயில்வே மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்தி, ரெயில்வே கேட்டை உடனடியாக சரி செய்தனர்.

கொடைக்கானலில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு ஆலடிப்பட்டியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஜெயலட்சுமி (வயது 55) என்பவர் உயிரிழந்தார். இழுத்துச்செல்லப்பட்ட திவ்யா (25) என்பவரை தேடி வருகிறார்கள். தேனி, திருப்பூர் மாவட்டஙகளிலும் பரவலாக மழை பெய்தது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் 4 வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன.

மேலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் நடுப்பாளையம் மற்றும் சதுமுகை பகுதியில் மின்தடை ஏற்பட்டு 2 கிராமங்களும் இருளில் மூழ்கின.

மேலும் செய்திகள்