அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து ரெயில்களிலும் ‘பயோ-கழிப்பறை’ வசதி

சர்வதேச ரெயில் தொழில்நுட்ப கண்காட்சி தொடக்க விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை ஐ.சி.எப். தயாரிக்கும் நவீன ரெயில் பெட்டிகள் குறித்த கையேட்டினை வெளியிட்டார்.

Update: 2018-05-18 00:00 GMT
சென்னை,

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து ரெயில்களிலும் ‘பயோ- கழிப்பறை’ (தண்ணீர் அதிகம் தேவை இல்லை) வசதி கொண்டு வரப்படும் என்று ரெயில்வே வாரியத் தலைவர் அஷ்வானி லோஹானி தெரிவித்தார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலை சார்பில் சர்வதேச ரெயில் பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி தொடக்க விழா சென்னை ஐ.சி.எப்.-ல் உள்ள அம்பேத்கர் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், இந்தியன் ரெயில்வே வாரிய தலைவர் அஷ்வானி லோஹானி, ஐ.சி.எப். பொதுமேலாளர் சுதன்சு மணி, இந்திய தொழில் கூட்டமைப்பு தென்மண்டல தலைவர் ஆர்.தினேஷ், ரெயில் போக்குவரத்து தலைவர் சி.பி.சர்மா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கண்காட்சி குறித்த புத்தகத்தையும், ஐ.சி.எப்-ல் புதிதாக தயாரிக்கப்படும் நவீன ரெயில் பெட்டிகள் குறித்த கையேட்டினையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

1955-ம் ஆண்டு முதல் இன்று வரை சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலை, ரெயில் பெட்டி தயாரிப்பில் அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. வரும் காலங்களில் பல வளர்ச்சி திட்டங்கள் ரெயில்வே துறையில் கையாளப்பட இருக்கின்றன. அந்தவகையில் 2022-ம் ஆண்டில் ஆமதாபாத்-மும்பை இடையே அதிவேக ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இரட்டை ரெயில் பாதைகள் ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டத்தின்கீழ் இணைக்கப்பட இருக்கின்றன. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், ‘குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்’ எனும் நவீன விரைவு திட்டம் ரெயில்வேயில் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதன்மூலம் பயணிகள் பாதுகாப்பு மற்றும் ரெயில் சேவை இன்னும் வளர்ச்சி அடையும்.

வருகிற 2022-ம் ஆண்டு 130 மெகாவாட் காற்றாலை மின்சாரம் மற்றும் சோலார் திறனில் இயங்கும் ‘அதி நவீன சோலார் ரெயில்கள்’ அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தூணாக ரெயில்வே துறை சாத்தியமாகி வருகிறது. வரும் ஆண்டுகளில் அந்த விகிதம் இன்னும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கண்காட்சி அரங்கை ரெயில்வே வாரியத் தலைவர் அஷ்வானி லோஹானி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரெயில் பயணத்தின்போது பயணிகளுக்கு ஒரு புதுமையான மற்றும் உற்சாகமான அனுபவத்தை தரக்கூடிய நடவடிக்கைகளை ரெயில்வே நிர்வாகம் கவனத்துடன் கையாளுகிறது. இதற்காக நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட உள்ளன. அதற்கான ஒரு முன்னோட்டமாக இந்த கண்காட்சி அமைந்திருக்கிறது. உலகளவில் திறமையான வல்லுனர்கள் ஏராளமானோர், தங்கள் படைப்புகளை இங்கே காட்சிப்படுத்தி உள்ளனர். எனவே நவீன யுக்திகளை கையாண்டு ஒரு ‘மாடர்ன் ரெயில்வே’ திட்டத்தை விரைவில் ஏற்படுத்துவோம்.

சென்னை மெட்ரோ ரெயில் பெட்டிகளை ஐ.சி.எப். இதுவரை தயாரித்தது இல்லை. ஆனாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. இதற்காக உலகின் 9 முன்னணி நிறுவனங்களுடன் தொழில்நுட்ப பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். தண்டவாளத்தில் எதிரெதிர் திசையில் ரெயில்கள் மோதிக்கொள்ளாமல் இருக்கும் வகையில் அதிநவீன சென்சார் உள்ளடங்கிய புதிய தொழில்நுட்ப வசதி கையாளப்பட்டு வருகிறது. இதற்கான சோதனைகள் செகந்திராபாத்தில் நடந்து வருகிறது. இந்த திட்டம் சாத்தியமாகும் பட்சத்தில் தொழில்துறை மற்றும் பாதுகாப்பு மேம்பாட்டில் ரெயில்வே புதிய அத்தியாயம் படைக்கும்.

ஐ.சி.எப்.-ல் தயாரிக்கப்படும் ரெயில் பெட்டிகள் உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதன் திட்ட அளவீடு சார்ந்த பணிகள் விரைவுபடுத்தப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில் 14 பெட்டிகளுக்கான திட்ட விவர அறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. இதற்கான இறுதி காலக்கெடுவை தற்போது கணக்கிட முடியாது.

கடந்த நிதி ஆண்டில் மட்டும் 3 ஆயிரத்து 500 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதில் பெரும்பாலும் எல்.எச்.பி. ரக பெட்டிகள் என்பது சிறப்பம்சமாகும். வருங்காலங்களில் தேவைக்கேற்ப இது அதிகப்படுத்தப்படும்.

பயோ கழிப்பறை வசதி பயணிகளிடையே சிறப்பான வரவேற்பை பெற்றதுடன், சுற்றுச்சூழல் சார் அக்கறையிலும் தனித்துவம் பெறுகிறது. அந்தவகையில் அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதத்துக்குள் அனைத்து ரெயில்களிலும் பயோ கழிப்பறை வசதி பொருத்தப்பட்டு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

சர்வதேச ரெயில் கண்காட்சி விழாவில் ரெயில் பயணம் குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் நகைச்சுவையுடன் தனது நினைவை பகிர்ந்துக்கொண்டார். அவர் கூறியதாவது:-

நானும், எனது தாத்தாவும் ரெயிலில் சென்றோம். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்து டிக்கெட்டை கேட்டார். என்னுடைய தாத்தா டிக்கெட்டை காண்பித்தபோது, ‘நீங்கள் வைத்திருப்பது 3-ம் வகுப்பு டிக்கெட். ஆனால் நீங்கள் ஏறி இருப்பது 2-ம் வகுப்பு பெட்டி என்று டிக்கெட் பரிசோதகர் கூறினார்.

2-ம் வகுப்புக்கும், 3-ம் வகுப்புக்கும் என்ன வித்தியாசம் என்று எனது தாத்தா கேட்டார். 2-ம் வகுப்பு பெட்டி மெத்தை இருக்கை வசதி கொண்டது என்று அதிகாரி தெரிவித்தார். உடனே என்னுடைய தாத்தா, ‘எனக்கு மெத்தை தேவை இல்லை. அதை எடுத்து விடுங்கள். எனவே நான் கூடுதல் கட்டணம் தர மாட்டேன் என்று தெளிவாக கூறினார். இவ்வாறு கவர்னர் பேசியபோது, கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

சர்வதேச ரெயில் தொழில்நுட்ப கண்காட்சியில் 10 வெளிநாட்டு நிறுவனங்கள் உள்பட 85 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. ரெயில் பெட்டி, என்ஜின், சக்கரங்கள், இருக்கைகள், மேற்கூரைகள் போன்ற ரெயில் பெட்டிகள் தயாரிப்பதற்கான உதிரிபாகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

ஐ.சி.எப். தயாரித்துள்ள மாதிரி ரெயில் பெட்டிகளும் கண்காட்சியை அலங்கரித்துள்ளன. ரெயில் பெட்டி தயாரிப்பு குறித்த வீடியோ காட்சிகளும் ஒளிபரப்பப்படுகின்றன. நேற்று தொடங்கிய கண்காட்சி நாளை(சனிக்கிழமை) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

கண்காட்சியை பார்வையிட நேற்று மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். அதே போன்று இன்று(வெள்ளிக்கிழமை) மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்று ஐ.சி.எப். மக்கள் தொடர்பு அதிகாரி ஜீ.வீ.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்