உலக தமிழ் சாதனையாளர்கள் விருது கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்

சேக்கிழார் விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு உலக தமிழ்சாதனையாளர்கள் விருதை அமைச்சர்கள் மற்றும் துணைவேந்தர்களுக்கு வழங்கினார்.

Update: 2018-05-20 23:15 GMT
சென்னை,

சென்னை தமிழ்சங்கம் சார்பில் செந்தமிழும், சேக்கிழாரும் இயல், இசை நாட்டிய திருவிழா, தியாகராயநகர் சர்.பி.டி.தியாகராயர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

உலக தமிழ்ச்சாதனையாளர்கள் விருதை தமிழ் ஆட்சி மொழி, தமிழ்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.தங்கசாமி, தமிழ்பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன், தமிழ்நாடு இசை பல்கலைக்கழக துணைவேந்தர் பிரமிளா குருமூர்த்தி, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் வள்ளி, மதுரை உலக தமிழ் சங்க இயக்குனர் சேகர், பேராசிரியர் தெய்வநாயகம், டாக்டர் சொக்கலிங்கம் உள்பட பலருக்கு வழங்கினார். மேலும் ஊடகவியல் துறைக்கான விருது ராஜ் டி.வி.க்கு வழங்கப்பட்டது. விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது.

வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர் சேக்கிழார். அவர் 12-வது நூற்றாண்டில் வாழ்ந்துள்ளார். அவர் 2-வது குலோத்துங்கசோழன் ஆட்சியில் வாழ்ந்துள்ளார். சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் தமிழ் மொழியில் முக்கியத்துவம் வாய்ந்தது. பெரிய புராணத்தை சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் வைத்து எழுதினார். அவர் என்ன எழுதுவது என்று தெரியாமல் இருந்தபோது சிவபெருமானே முதல் அடியை எடுத்து கொடுத்து எழுத வைத்தார்.

நாயன்மார்கள் 63 பேர் வேறு வேறு காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்கள். வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள். இருந்தபோதிலும் சாதியை பற்றி பாராமல் 63 நாயன்மார்கள் பற்றி எழுதியவர்.

தமிழுக்கு சேக்கிழார் தொண்டாற்றி உள்ளார். சேக்கிழாரின் பெரிய புராணம் இல்லாமல் தமிழ் வரலாற்றை கூற முடியாது.

நடனக்கலைக்கு சிவபெருமான் சிதம்பரம் நடராஜர் ஆக அர்ப்பணித்துள்ளார். இயல், இசை, நாடகம் ஆகியவற்றை தமிழ் மொழி உள்ளடக்கி உள்ளது. சேக்கிழார் பெரிய புராணத்தில் அந்த 3 தமிழுக்கும் சிறப்புற இடம் கொடுத்து உள்ளார். தமிழ் மொழி அழகான மொழி. தமிழ் மொழியை எனக்கு மிகவும் பிடிக்கும். இவ்வாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

விழாவுக்கு சென்னை தமிழ்ச்சங்க தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஆலோசகரும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான மா.ராமு வரவேற்றார்.

மேலும் செய்திகள்