நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு உத்தரவு

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2018-05-25 10:37 GMT
சென்னை,

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது, இதில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வதந்திகள் பரவகூடாது என தமிழக அரசு தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் இணையதள சேவையை முடக்கியது. 5 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் இப்போது இணைய சேவை முடக்கமானது பெரும் இடையூறை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.

 இணைய சேவை முடக்கத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர்கள், வணிக நிறுவனங்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நடைபெற்ற போது திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் இணைய சேவை முடக்கத்திற்கான காரணம் என்ன? என கேள்வியை எழுப்பியது. இந்நிலையில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

 இதுதொடர்பாக அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இணைய சேவை நிறுவனங்களுக்கு தமிழக உள்துறை அனுப்பி உள்ளது.

மேலும் செய்திகள்