காலா படம் வெளியாக கர்நாடக சகோதரர்கள் ஒத்துழைக்க வேண்டும்; நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்

காலா படம் வெளியாக கர்நாடக சகோதரர்கள் ஒத்துழைக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Kala #RajiniKanth

Update: 2018-06-06 04:09 GMT
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.  இதனிடையே, காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் குரல் கொடுத்ததால், அவருடைய படத்தை வெளியிட தடை விதிக்கும்படி கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து கர்நாடக திரைப்பட வர்த்தகசபை அந்த படத்திற்கு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், காலா படம் வெளியாகும் போது கர்நாடக தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தொடர்ந்த வழக்கில் கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும், கர்நாடகாவில் காலா படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.  இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.  அவர் பேசும்பொழுது, காவிரி விவகாரத்தில் கருத்து கூறியதற்காக காலா படம் ரிலீஸ் செய்ய முடியாது என்பது சரியல்ல.  உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் குறிப்பிட்ட காரணத்திற்காக படம் ரிலீஸ் செய்ய முடியாது என்பது சரியானது இல்லை என கூறியுள்ளார்.

படத்தை பிரச்னையின்றி ரிலீஸ் செய்வதுதான் வர்த்தக சபையின் வேலை.  அவர்கள் தடை விதிப்பது சரியில்லை.  ஆனால் கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதல் அமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது.

காலா படத்திற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல.  கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை.  உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம்.  காலா பட விவகாரத்தில் கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம் என்று கூறியுள்ளார்.

காலா படம் வெளியாக கர்நாடக சகோதரர்கள் ஒத்துழைக்க வேண்டும் என பேட்டியின் இறுதியில் கன்னடத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

மேலும் செய்திகள்