தமிழகத்தில் சர்க்கரை இருப்பு வைப்பதற்கான வரம்பை தளர்த்த வேண்டும்: முதல்-அமைச்சர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம்

தமிழகத்தில் சர்க்கரை இருப்பு வைப்பதற்கான வரம்பை தளர்த்த வேண்டும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2018-06-07 15:51 GMT
சென்னை,

தமிழகத்தில் சர்க்கரை இருப்பு வைப்பதற்கான வரம்பை தளர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திரமோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று (வியாழக்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், “தமிழகத்தில் வறட்சி காரணமாக கரும்பு சாகுபடி மற்றும் உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. அதன்காரணமாக, தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் கடும் நிதி நெருக்கடியில் இருக்கின்றன. இதனால், லட்சக்கணக்கான கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தாங்கள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு நிறைவேற்ற வேண்டும்.

1. தமிழகத்தில் ஓராண்டுக்கு 15 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை தேவைப்படுகின்றது. ஆனால், தமிழகத்தில் 5.8 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை மட்டுமே உற்பத்தியாகின்றது. அதனால், சர்க்கரை இருப்பு வைப்பதற்கான வரம்பை தளர்த்த வேண்டும்.

2. தமிழகத்தில் சர்க்கரை கிலோ ரூ.19-க்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால், பெருத்த நஷ்டம் ஏற்படுவதால் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை உயர்த்தி அதிகரிக்க வேண்டும்.

3. சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தர வேண்டிய நியாய மற்றும் ஆதாய விலைக்கான நிலுவைத் தொகையை கரும் நிதி நெருக்கடிகளுக்கு அப்பால், அதிக வட்டிக்கு கடன் வாங்கி செலுத்தி வருகின்றனர். எனவே, கரும்பு விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு அறிவித்த நிதியை உடனே வழங்க வேண்டும்.

4. ஒரு குவிண்டால் கரும்புக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட ரூ.5.5 உற்பத்தி மானியம் மாநிலத்தின் அனைத்து விவசாயிகளுக்கும் ஆலைகளுக்கும் விரிவாக்கப்பட வேண்டும்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்