நள்ளிரவில் நடந்த விசாரணை: கருப்பு பணம் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்

கருப்பு பணம் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டது. நள்ளிரவில் நடந்த விசாரணையில், உத்தரவை தட்டச்சு செய்ய ஊழியர் இல்லாததால், நீதிபதியே தீர்ப்பை கைப்பட எழுதினார்.

Update: 2018-06-10 22:15 GMT
சென்னை,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோர் மீது வருமான வரித்துறை, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை பல வழக்குகளை பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றன.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் சொத்துகள் வாங்கியதை மறைத்ததாக நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மீது கருப்பு பணம் தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் ரூ.5.37 கோடி மற்றும் ரூ.80 லட்சம் மதிப்புள்ள 2 சொத்துகளும், அமெரிக்காவில் ரூ.3.28 கோடி மதிப்புள்ள சொத்தும் வாங்கப்பட்டுள்ளது குறித்து விளக்கம் கேட்டு அவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பியது.

இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய வருமான வரித்துறை வாரண்டு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய போலீசார் நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர் தன் மனைவி, மகளுடன் வெளிநாடு செல்ல தயாராகிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த வாரண்டை எதிர்த்தும், முன்ஜாமீன் கேட்டும் கார்த்தி சிதம்பரம் சார்பில் ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசரமாக உடனே விசாரணைக்கு எடுக்கவேண்டும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜியிடம், கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சதீஷ் பராசரன் ஆகியோர் முறையிட்டனர்.

இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகும்படி கூறினார். இதையடுத்து, ஐகோர்ட்டு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா வீட்டிற்கு இரவில் வக்கீல்கள் சென்றனர். இரவு 11.15 மணியளவில் இந்த முன்ஜாமீன் மனுவை தன்னுடைய வீட்டில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார்.

அப்போது, வருமான வரித்துறை வக்கீல் ஏ.பி.சீனிவாஸ் மற்றும் அதிகாரிகள் ஆஜரானார்கள். ‘வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகளின் விவரங்களை மறைத்தது தொடர்பாக, கருப்பு பணம் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகும்படி 3 முறை சம்மன் அனுப்பியும் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகவில்லை. அதனால், அவரை கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப்பட்டது’ என்று வருமான வரித்துறை வக்கீல் வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மூத்த வக்கீல்கள் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சதீஷ் பராசரன் ஆகியோர் வாதிட்டார்கள். ‘ஜூன் 10-ந் தேதி மனைவி, மகளுடன் வெளிநாடு செல்ல ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் அனுமதி பெற்றுள்ளார். வருமான வரித்துறை அனுப்பிய சம்மனுக்கு கார்த்தி சிதம்பரம் முறையான விளக்கத்தை அனுப்பியுள்ளார். ஆனாலும் உள்நோக்கத்துடன் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்’ என்று வாதிட்டனர்.

நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, வருமான வரித்துறை விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் எப்போது ஆஜராவார்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு வருகிற 28-ந் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக கார்த்தி சிதம்பரம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டை செயல்படுத்தக்கூடாது என்றும், கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார். இந்த விசாரணை இரவு 11.15 மணி முதல் 12.30 மணி வரை நடந்தது. நள்ளிரவு என்பதால் தீர்ப்பை தட்டச்சு செய்ய கோர்ட்டு ஊழியர் இல்லை. அதனால் தீர்ப்பை நீதிபதியே கைப்பட எழுதி வழங்கினார்.

மேலும் செய்திகள்