17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு அவசர வழக்காக நாளை மறுநாள் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்

17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு அவசர வழக்காக நாளை மறுநாள் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்து உள்ளது. #17MLAs #SupremeCourt

Update: 2018-06-25 06:26 GMT
சென்னை, 

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கொடுத்தனர். இது கொறடா உத்தரவை மீறிய செயல் என்று கூறப்பட்டது. 

இதையடுத்து அந்த 18 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த இரு தினங்களுக்கு முன்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு வழங்கியது.

அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறுகையில், சபாநாயகர் எடுத்த முடிவு சரியானது. அவரது முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றார். இதையடுத்து நீதிபதி சுந்தர் கூறுகையில், சபாநாயகர் எடுத்த முடிவு தவறானது என்று தீர்ப்பளித்தார். இரு நபர்கள் கொண்ட அமர்வில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கில் 3-ஆவது நீதிபதியாக விமலாவை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் நியமனம் செய்தார்.

இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் தங்க தமிழ்ச்செல்வன் தவிர்த்து 17 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் நேற்று  உச்சநீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணை மேற்கொண்டால் உரிய நீதி கிடைக்காது என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தகுதி நீக்க வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.    17 பேரின் கோரிக்கையை ஏற்று அவசர வழக்காக நாளை மறுநாள் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்து உள்ளது.

மேலும் செய்திகள்