நெல்லையில் சாமி சிலைகள் திருட்டு சம்பவம்: 13 வருட தலைமறைவு குற்றவாளி கைது

நெல்லை பழவூரில் சாமி சிலைகள் திருடப்பட்ட சம்பவத்தில், கடந்த 13 வருடங்கள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2018-07-07 22:35 GMT
சென்னை, 

நெல்லை மாவட்டம் பழவூர் சரகத்தில் உள்ள நாறும் பூநாதர் கோவிலில், கடந்த 2005-ம் ஆண்டு பூட்டை உடைத்து 13 உலோக சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த 13 சிலைகளில் 4 சிலைகள் மட்டும் சென்னையில் இருந்து மும்பைக்கு கடத்தி செல்லப்பட்டு, அங்கிருந்து கள்ளத்தனமாக லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் ரூ.15 கோடி மதிப்புள்ள ஆனந்த நடராஜர் ஐம்பொன் சிலையும் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணையில் இறங்கியது. அதன் தொடர்ச்சியாக சிலை திருட்டு குற்றவாளிகள் சுபாஷ்கபூர், வல்லவ பிரகாஷ், ஆதித்ய பிரகாஷ், டெல்லிகுமார் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

தலைமறைவு குற்றவாளி கைது

இந்த வழக்கில் நெல்லை மாவட்டம் தாழையூத்தை சேர்ந்த பரமதுரை (வயது 42) கடந்த 13 வருடங்களாக தலைமறைவாகவே இருந்துவந்தார். இந்தநிலையில் சென்னை கோயம்பேட்டில் பரமதுரை பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் கோயம்பேட்டுக்கு சென்று, தலைமறைவாக இருந்த பரமதுரையை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அதனைத்தொடர்ந்து கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பரமதுரை ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் செய்திகள்