வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

Update: 2018-07-07 22:41 GMT
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

ஆந்திரா முதல் தமிழகம் வரையிலான கடலோர பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். வடமேற்கு வங்க கடல் மற்றும் ஒடிசாவை ஒட்டி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருந்தாலும், இதனால் தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு இருக்காது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் ஜி.பஜார் மற்றும் தேவாலாவில் அதிகபட்சமாக தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் தலா 2 செ.மீ., உதகமண்டலத்தில் 1 செ.மீ. மழையும் பெய்து இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்