கிராமங்களில் மருத்துவர்கள் 3 ஆண்டுகள் பணியாற்றுவதை கட்டாயமாக்க வேண்டும் வெங்கையாநாயுடு பேச்சு

முதல் பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பு மருத்துவர்கள், கிராமங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றி இருப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

Update: 2018-07-08 23:30 GMT
சென்னை, 

முதல் பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பு மருத்துவர்கள், கிராமங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றி இருப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுகாதாரத்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் 4 ஆயிரத்து 529 பேர் பட்டம் பெற்றனர்.

பட்டமேற்படிப்பு மாணவ, மாணவிகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வழங்கி, துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு பேசியதாவது:-

10 கோடி பேர்

மக்கள் நலனை பேணுவதில் தமிழகம் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. மருத்துவக்கல்வியில் உயர்ந்த தரத்தை கடைபிடிப்பதிலும் அதைத்தொடர்ந்து மேற்கொள்வதிலும் பெரிய மருத்துவ பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் விளங்குகிறது.

அண்மையில் கிடைத்த தகவலின்படி இந்தியாவில் 479 மருத்துவக்கல்லூரிகளில் 227 கல்லூரிகளை அரசும், 252 கல்லூரிகளை தனியாரும் நடத்துகின்றனர். அவற்றில் ஆண்டுதோறும் 67 ஆயிரத்து 532 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பிலும் 31 ஆயிரத்து 415 பேர் முதுநிலை மருத்துவ படிப்புகளிலும் சேருகிறார்கள்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ’ஆயுஷ்மான் பாரத்’ என்ற தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 10 கோடி பேர் பயன் அடைவார்கள். ஒரு ஆண்டுக்கு ஒரு குடும்பம் ரூ.5 லட்சம் மதிப்பில் பயன் அடைய வாய்ப்பு உள்ளது.

கிராமங்களில் 3 ஆண்டுகள்

மருத்துவத்துறையில் இருப்போர் மற்ற சேவைத்தொழிலில் உள்ளவர்களை விட மாறுதலானவர்கள். நோயாளிகள் அவர்களை கடவுளாக பார்க்கிறார்கள். எனவே பொறுப்பை உணர்ந்து நீங்கள் பணியாற்ற வேண்டும்.

பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 53 குழந்தைகள் 5 வயதுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை. போதிய உயரமின்மை, சத்துக்குறைபாடு ஆகியவை இன்னும் நீடிக்கும் பிரச்சினைகளாக உள்ளன. ஒவ்வொரு மருத்துவரும் சிறந்த மருத்துவராக மாற வேண்டும். மருத்துவர்களுக்கு முதல் பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பு கிராமங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றி இருப்பதை கட்டாயமாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தங்கப்பதக்கம்

மருத்துவ பட்ட மேற்படிப்பில் கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் படித்த ஜி.சைலேந்திரி, தனியார் மருத்துவக்கல்லூரியில் படித்த மாணவர் சமீர் இருவரும் 3 தங்கப்பதக்கங்களும், 2 வெள்ளிப்பதக்கங்களும் பெற்றனர். அதேபோன்று தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பயின்ற எம்.உஷா நந்தினி 4 தங்கப்பதக்கங்களும், 1 வெள்ளி பதக்கமும் பெற்றார். அதேபோல் பி.சர்மிளா 1 தங்கப்பதக்கமும், 2 வெள்ளிப்பதக்கங்களும் பெற்றார். மொத்தம் 164 தங்கம், வெள்ளி பதக்கங்களை 127 பேர் பெற்றனர்.

விழாவில் அமைச்சர் டாக்டர். சரோஜா மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி வரவேற்று பேசினார்.

மேலும் செய்திகள்