அரசு விற்பனை செய்த நிலத்தை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை மு.க.ஸ்டாலின் புகாருக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்

ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளைக்கு அரசு விற்பனை செய்த நிலத்தை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் புகாருக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

Update: 2018-07-09 22:00 GMT
சென்னை,

ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளைக்கு அரசு விற்பனை செய்த நிலத்தை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் புகாருக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை திருவான்மியூரில் தமிழக வீட்டுவசதி வாரியத்தால் ஸ்ரீ ராமச்சந்திரா அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்ட நிலம் குறித்து பேசினார். அப்போது அவர், “ஸ்ரீ ராமச்சந்திரா அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்ட 7.44 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.405 கோடியாகும். அவர்கள் கல்வி நிறுவனம் தொடங்குவதற்காக ரூ.33 கோடிக்கு விலை குறைவாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விதிகளை மீறி அங்கு திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது” என்றார்.

அதற்கு பதிலளித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளைக்கு, 16-7-2014 அன்று 7.44 ஏக்கர் நிலத்திற்கு, கிரவுண்ட் ஒன்றுக்கு ரூ.6 லட்சத்து ஆயிரத்து 320 விலையில் விற்பனை பத்திரம் வழங்கப்பட்டது. விலை நிர்ணயம் செய்யும்போது வாரிய விதிகளின்படி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலத்திற்கு வழங்கப்பட்ட விற்பனை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நில பயன்பாட்டின்படி ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை நிலத்தினை பயன்படுத்த வேண்டும். அதில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் நாங்கள் வெளிப் படைத் தன்மையாக ஆட்சி செய்துகொண்டு வருகின்றோம். இதில் எந்த விதமான அதிகாரத் துஷ்பிரயோகமும் இல்லை. 1998-ம் ஆண்டு இதற்கு விதை போட்டவர்களே நீங்கள்தான். அனுமதி கொடுத்தீர்கள், பொது நிறுவனங்கள் குழுவில் நீங்கள் அங்கீகாரம் அளித்திருக்கின்றீர்கள். அ.தி.மு.க. ஆட்சியில் நீங்கள் உறுப்பினராக வந்து எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை.

நிலம் எந்த நோக்கத்திற்காக வழங்கப்பட்டதோ, அந்த நோக்கத்தில் இருந்து மாறுபட்டிருந்தால் உரிய நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும். தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உரிய முறையில் விசாரிக்கப்படும். விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்