தமிழகத்தில் நீர்நிலைகள் மீது 49 சதவீத ஆக்கிரமிப்பு

தமிழகத்தில் நீர்நிலைகள் மீது 49 சதவீத ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக இந்திய தணிக்கைத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

Update: 2018-07-10 23:59 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தலைவரின் அறிக்கை (2017-ம் ஆண்டு மார்ச் வரை) நேற்று முன்தினம் வைக்கப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகள் காணப்படுகின்றன. 2017-ம் ஆண்டு ஜூன் நிலவரப்படி, மொத்தமுள்ள அரசு நிலங்களில் 2.05 ஹெக்டேர் நிலம், அதாவது 7 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது.

இதில் புதிய ஆக்கிரமிப்புகளை அரசு பதிவு செய்யவில்லை. எனவே ஆக்கிரமிப்புகள் தொடர்பான பதிவுகளை நம்ப முடியாமல் போய்விட்டது.

சென்னையில் சாலையோர ஆக்கிரமிப்புகள், ஒரு கி.மீ.க்கு 3.4 ஆக்கிரமிப்புகள் என்ற அளவில் இருந்தன. இது சென்னை மாநகராட்சியின் செயல்படாத தன்மையைக் காட்டுகிறது.

நீர்நிலைகள் மீது 49 சதவீத ஆக்கிரமிப்புகள் காணப்பட்டன. வருவாய்த்துறை மற்றும் நீர்வளத்துறை ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பின்மைதான் இதற்கு காரணம்.

2010-ம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு மாநில அளவிலான உயர்மட்ட குழு கூடவில்லை என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான கண்காணிப்பு நடக்கவில்லை.

விவசாய பொருட்களை தேக்கிவைப்பதற்காக கிடங்குகள் சரியான திட்டமிடுதல் இல்லாததால், குறைவான கொள்ளளவு கொண்டவையாக கட்டப்பட்டன.

சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களில் தகுதியற்ற பயனாளிகள் அதிகமாக சேர்க்கப்பட்டு இருக்கவும், தகுதியுள்ள பயனாளிகள் சேர்க்கப்படாமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் காணப்பட்டன.

2014-ம் ஆண்டில் ஓய்வூதியதாரர்களின் தகுதி 100 சதவீதம் சரிபார்க்கப்பட்டது. இதில் தணிக்கை செய்து பார்த்தபோது 118 தகுதியற்ற பயனாளிகள் ஓய்வூதியம் பெறும் நிலையில் 934 தகுதியான பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

2007-14-ம் ஆண்டுகளில் ஒப்பளிக்கப்பட்ட 10 குடிநீர் வழங்கல் திட்டங்களும், 8 பாதாள சாக்கடை திட்டங்களும் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் வரை முடிக்கப்படவில்லை. தவறான முறையில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தால் ஓரிடத்தில் பாதாள சாக்கடைத் திட்டப்பணி நிறுத்தப்பட்டது. மாதிரி திட்டங்களின் கீழ் போடப்பட்ட 166 சாலைகளில் 53 சாலைகள் உரிய பராமரிப்பில்லாமல் மோசமாக இருந்தன.

கடல் ஆமை குஞ்சு பொரிப்பகங்களின் வழிகாட்டியை இறுதி செய்ய காலதாமதம் ஏற்பட்டது. இதனால் போதிய அளவு முட்டைகள் சேகரிக்கப்படவில்லை. போதிய அளவில் குஞ்சுகள் பொரிக்கவில்லை. கடல் ஆமைக் கருவிகள் அனைத்தும் வழங்கப்படவில்லை. எனவே அழியக்கூடிய கடல் ஆமைகளை காப்பாற்றும் பணி முழுமையாக பலன் தரவில்லை.

பொதுப்பணித்துறையின் குவாரிகளில் வாங்கப்பட்ட மணலின் மதிப்பிலும், மணல் சேமிப்பு மைய உரிமைதாரர்கள், வணிக வரித்துறைக்கு தெரிவித்த மணல் விற்பனை விலையிலும் வேறுபாடுகள் இருந்தன. மக்களுக்கு நியாய விலையில் மணல் வழங்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் நிறைவேறவில்லை.

அனுமதி சீட்டுகள் மற்றும் விற்பனை சீட்டுகள் வழங்குவதில் பெரும் குறைபாடுகள் இருந்தன. ஐந்து குவாரிகளை தேர்வு செய்து ஆய்வு செய்ததில், 7,906 வாகனங்களின் எண்களில் 3,381 வாகனங்கள் போக்குவரத்து லாரிகள் என்று பதிவு செய்யப்படவில்லை. மாறாக, இரண்டு சக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள், கார்கள் என்று பதிவு செய்யப்பட்டு இருந்தது. சட்டவிரோதமாக மணல் எடுக்கும் குற்றங்கள் அதிகரித்ததோடு மட்டுமல்லாமல், அறிவியலுக்கு புறம்பாக மணல் எடுப்பதை தடுக்கும் நோக்கம் நிறைவேறவில்லை.

தமிழகத்தில் புதிய 2 ஆயிரத்து 20 பஸ்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் 90 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. புதிய பஸ்களை இயக்குவதை விழாவாக எடுத்து, முதல்-அமைச்சர் (அப்போது ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தார்) கொடியசைத்து தொடங்கி வைப்பது வழக்கமாக இருந்ததால், அந்த விழாவுக்கான தேதியைப் பெறுவது துறையின் கட்டுப்பாட்டில் இல்லை என்று அரசு தெரிவித்தது.

இப்படிப்பட்ட நிர்வாக தாமதங்களால் வட்டி இழப்பு ரூ.10.29 கோடியும், அதிக எரிபொருள் பயன்படுத்தப்பட்டதால் ரூ.3.94 கோடியும் தேவையற்ற இழப்பாக நேரிட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்