போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த ஏற்பாட்டில் தீவிரம்

அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால், வேலைநிறுத்த ஏற்பாட்டை தீவிரப்படுத்த இருப்பதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Update: 2018-07-12 22:45 GMT
சென்னை, 

பொதுத்துறை போக்குவரத்தையும், தொழிலாளர்களின் உரிமைகளையும் பாதுகாக்க வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் ஏற்கனவே வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து இருந்தன. இதுதொடர்பான சமரச பேச்சுவார்த்தை தொழிலாளர் துறை அதிகாரி முன்னிலையில் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை சிறப்பு தனி இணை ஆணையர் சாந்தி, போக்குவரத்து துறையின் 5 மண்டல மேலாண்மை இயக்குனர்கள், தொழிற்சங்கங்கள் தரப்பில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்பட 10 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் காரசாரமாக விவாதங்கள் நடந்தன. இறுதியில் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அடுத்த பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து பிற்பகலில் சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தொ.மு.ச. அலுவலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையில் தொ.மு.ச., சி.ஐ.டியு. உள்பட 10 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

ஆலோசனையின் முடிவில் அனைத்து தொழிற்சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் பிரச்சினைகளை தீர்க்கும் நிலையில் அரசோ, அதிகாரிகளோ வரவில்லை. மேலும் பல்வேறு வகைகளில் கழகங்களை சீர்குலைப்பது, தனியார்மயத்தை நோக்கிச் செல்வது போன்ற நடைமுறைகளே அரசின் திட்டமாக உள்ளது. மறுபுறத்தில் தொழிலாளர்களை வஞ்சிக்கும் அடிப்படையில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

எனவே இவை அனைத்தையும் விவாதித்த பின்னர் வேலைநிறுத்த ஏற்பாட்டை தீவிரப்படுத்துவது என முடிவு செய்துள்ளோம். முதல்கட்டமாக வருகிற 19-ந் தேதி (வியாழக்கிழமை) அனைத்து மண்டல தலைமையகங்களிலும் வேலைநிறுத்த விளக்க ஆர்ப்பாட்ட வாயிற்கூட்டங்கள் நடத்துவது எனவும், 27-ந் தேதி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் போராட்டம் சம்பந்தமான அறிவிப்பை வெளியிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

பொதுத்துறை போக்குவரத்தையும், நமது உரிமைகளையும் பாதுகாக்க தொழிற்சங்க கூட்டமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு தொழிலாளர்கள் பேராதரவு தருவதுடன் கூட்டமைப்பின் போராட்டங்களை வெற்றிகரமாக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்