சட்டவிரோத பேனர்களை அகற்றவில்லை: உத்தரவுகள் எல்லாம் காகித வடிவில்தான் உள்ளது அரசுக்கு, ஐகோர்ட்டு கண்டனம்

சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்கள் அகற்றப்படுவது இல்லை என்றும், இதுதொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகள் எல்லாம் காகித வடிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Update: 2018-07-13 21:30 GMT
சென்னை, 

சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்கள் அகற்றப்படுவது இல்லை என்றும், இதுதொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகள் எல்லாம் காகித வடிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் அனுமதியின்றி, பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ராட்சத விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முறையான எந்த அனுமதியும் பெறவில்லை. இந்த பேனர்களை வைப்பவர்கள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுப்பது இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் தட்சணாமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சாலைகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சட்டவிரோதமாக சாலைகளில் பொதுமக்ககளுக்கு இடையூறு செய்யும் விதமாக பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளார். விமான நிலையம் முன்புள்ள சாலையிலும், கடற்கரை சாலையிலும் நடைபாதையை மறித்து, மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு பேனர்கள் வைக்கப்பட்டதால், தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார். இருந்தாலும், இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘ஐகோர்ட்டு உத்தரவை செயல்படுத்த அதிகாரிகளுக்கு எண்ணமில்லையா? பல உத்தரவுகள் காகித அளவிலேயே வைக்கப்பட்டுள்ளன. நடவடிக்கை எடுத்துவிட்டதாக ஐகோர்ட்டில் அரசு கூறுகிறது. சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று பார்த்தால், அங்கு அதே நிலைதான் நீடிக்கிறது. ஐகோர்ட்டை சுற்றியே ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த முடியவில்லை என்றால் கூறுங்கள். எங்கள் உத்தரவை எப்படி அமல்படுத்த வைக்க வேண்டும்? என்று எங்களுக்கு தெரியும். அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்றனர்.

பின்னர், இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்