போட்டியில் பங்கேற்க அமெரிக்கா செல்ல விரும்பும் நடனக்குழு: முதல்–அமைச்சரை சந்தித்து உதவி கேட்டனர்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடனக்குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நேற்று சந்தித்துப் பேசினர்.

Update: 2018-07-13 22:00 GMT
சென்னை, 

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடனக்குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நேற்று சந்தித்துப் பேசினர்.

பின்னர் அந்த நடனக் குழுவைச் சேர்ந்த மவுரியன் கூறியதாவது:–

சென்னை சைதாப்பேட்டையில் 17 பேர் கொண்ட நடனக் குழுவை நடத்தி வருகிறோம். 5 ஆண்டுகளுக்கு முன்பு நடேசன் பூங்காவில் பயிற்சியை தொடங்கினோம். சின்னச் சின்ன போட்டிகளில் கலந்துகொண்டோம். தமிழக அளவில் நடக்கும் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றோம். உலக அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று, தற்போது அமெரிக்காவில் 29–ந் தேதி நடக்கும் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள இருக்கிறோம். அதற்கு நிதியுதவி தேவைப்பட்டது. நடிகர் ராகவா லாரன்ஸ் மூலம் எங்களுக்கு ரூ.5 லட்சம் கிடைத்தது. முதல்–அமைச்சரை பார்க்கும் வாய்ப்பையும் உருவாக்கித் தந்தார். இந்தியாவுக்கு பெருமை சேர்ப்போம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராகவா லாரன்ஸ் கூறியதாவது:–

கலிபோர்னியாவில் உலக அளவிலான நடனப்போட்டி நடைபெறுகிறது. அதில் பங்கேற்க இந்தியா அளவில் சென்னை இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முன்பு வாய்ப்பு கிடைத்தும் பண வசதி இல்லாததால் அது சாத்தியமில்லாமல் போய்விட்டது.

எனது கடமையாக ரூ.5 லட்சத்தை வழங்கியிருக்கிறேன். அரசு மூலமாக உதவி பெற நாடினார்கள். எனவே முதல்–அமைச்சரிடம் அனுமதி பெற்றுக்கொடுத்தேன். இதுபற்றி அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்