கல்லூரி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இறந்த மாணவியின் அண்ணன் பேட்டி

பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாத கல்லூரி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இறந்த மாணவியின் அண்ணன் கூறினார்.

Update: 2018-07-13 23:00 GMT
கோவை, 

கோவை அருகே உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது இறந்த மாணவி லோகேஸ்வரிக்கு செல்வகுமார் (வயது 22) என்ற ஒரு அண்ணன் மட்டும் உள்ளார்.

விவசாயம் செய்து வரும் அவர் கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது தங்கை லோகேஸ்வரிக்கு சேவை செய்வதில் அதிக அக்கறை உண்டு. இதனால்தான் அவர் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தில் சேர்ந்தார். கல்லூரியில் நடந்த பயிற்சியின்போது அவர் கீழே விழுந்து இறந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் எங்களிடம் இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.

எனது தங்கையின் தோழி பவித்ராவின் தந்தைதான் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் எனது செல்போனுக்கு தொடர்பு கொண்டு, லோகேஸ்வரி மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டார். படுகாயத்துடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்று கூறினார்.

இதை கேட்டதும் பதறியடித்து நாங்கள் கோவைக்கு சென்று பார்த்தபோது, அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனது தங்கையின் சாவு எப்படி நடந்தது என்று இதுவரை கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை. இதனால் கல்லூரி மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் சரியான பாதுகாப்பு, முன்னேற்பாடு இல்லாமல்தான் இந்த பயிற்சி நடந்து உள்ளது. 2-வது மாடியில் இருந்து மாணவர்கள் கீழே குதிக்கும்போது அதற்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் அங்கு செய்யவில்லை. எனவே கல்லூரி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்று முறையான பயிற்சி பெறாதவரை வைத்து இனிமேல் எந்த கல்லூரியிலும் பயிற்சி கொடுக்கக்கூடாது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தால் மட்டுமே இதுபோன்ற பயிற்சிகளை கொடுக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவியின் தந்தை நல்லா கவுண்டர், தாயார் சிவகாமி ஆகியோர் கண்ணீர் மல்க கூறியதாவது:-

கல்லூரியில் எதை நடத்தினாலும் பாதுகாப்பாகத்தான் நடத்துவார்கள் என்று நம்பித்தான் அனைத்து பெற்றோரும் தங்களது குழந்தைகளை அனுப்புகிறார்கள். ஆனால் கல்லூரி முறையான பாதுகாப்பு இல்லாமல் நடத்திய பயிற்சி காரணமாக எனது மகளை நாங்கள் பறிகொடுத்து செய்வது அறியாமல் திகைத்து நிற்கிறோம்.

கல்லூரிக்கு படிக்க சென்ற எங்களது மகளை பயிற்சி கொடுக்கிறோம் என்ற பெயரில் அநியாயமாக கொன்று விட்டார்கள். இப்படி ஒரு சம்பவம் நடந்த பின்னரும், சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் சார்பில் இதுவரை எங்களிடத்தில் நடந்தது குறித்து எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. நாங்கள் வேறு நபர்கள் மூலம்தான் தெரிந்துகொண்டோம். எனவே எங்களது மகளின் சாவுக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்