95 அடியை தாண்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம், மாலைக்குள் 100 அடியை எட்டும் என எதிர்பார்ப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியில் இருந்து 95.73 அடியாக உயர்ந்துள்ளது. #MetturDam #Water

Update: 2018-07-17 03:01 GMT
சென்னை,

கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் காவிரி ஆற்றில் கூடுதலாக திறந்து விடப்படுகிறது. 

கூடுதல் நீர்வரத்து காரணமாக தமிழகத்தில் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் பிரதான நீர் ஆதாரமான மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணைக்கு இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90,000 கன அடியில் இருந்து 1,07,064 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம்,  மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியில் இருந்து 95.73 அடியாக உயர்ந்துள்ளது  அணையில் நீர் இருப்பு 59.44 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணையின் உச்ச நீர்மட்டம் 124 அடி ஆகும். அணையின் பாதுகாப்பு கருதி 120 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 93.5 டி.எம்.சி. ஆகும்(ஒரு டி.எம்.சி. என்பது நூறு கோடி கனஅடி). கடந்த 2013-ம் ஆண்டு மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அணைக்கு  வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நீர் வரத்து காரணமாக  இன்று மாலைக்குள் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 19-ந் தேதி (வியாழக்கிழமை) மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று அறிவித்துள்ளார். இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். முதல்-அமைச்சரின் அறிவிப்பை அடுத்து தமிழக விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மகிழ்ச்சியுடன் தொடங்கி உள்ளனர். 

மேலும் செய்திகள்