அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்சை உள்ளூர் கேபிள் ஆபரேட்டரிடம் திருப்பிச் செலுத்துங்கள்

வசிக்கும் இடத்தில் இருந்து வேறிடத்துக்கு மாறிச்செல்லும்போது, அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்சை உள்ளூர் கேபிள் ஆபரேட்டரிடம் திருப்பிச் செலுத்திவிட வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2018-07-20 21:05 GMT
சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை வழங்கி டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையை வழங்கி வருகிறது.

இந்தநிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்நிறுவனத்தின் சந்தாதாரர்கள் வேறு ஊருக்கு பணி காரணமாகவோ, இடவசதி காரணமாகவோ குடிபெயர்ந்து செல்லும்போது, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள செட்டாப் பாக்ஸ்களையும் எடுத்துச்சென்று விடுவதாக இந்நிறுவனத்திற்கு புகார் தெரிவிக்கப்படுகிறது.

திருப்பிச் செலுத்துங்கள்

ஒரு பகுதியில் வழங்கப்படும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை வேறு பகுதியில் உள்ள உள்ளூர் கேபிள் ஆபரேட்டரால் செயலாக்கம் செய்ய இயலாது.

எனவே, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சேவையை பெற்று வரும் சந்தாதாரர்கள் வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்றாலோ அல்லது அதே ஊரில் வேறு ஒரு பகுதிக்குச் சென்றாலோ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள செட்டாப் பாக்ஸ்களை அந்த பகுதியில் உள்ள உள்ளூர் கேபிள் ஆபரேட்டரிடம் திருப்பிச் செலுத்திவிட்டு செல்ல வேண்டும்.

செயல்படாது

அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் செட்டாப் பாக்ஸ்கள், எடுத்து செல்பவருக்கோ (அல்லது) தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கோ பயனற்றதாகிவிடும்.

எனவே, புதிய பகுதிக்கு சென்றபின் அந்த பகுதியில் உள்ள உள்ளூர் கேபிள் ஆபரேட்டரிடம் சி.ஏ.எப். படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து புதிய செட்டாப் பாக்ஸ்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு பகுதியில் வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸை எடுத்துச்சென்று வேறொரு பகுதியில் அங்கு உள்ள உள்ளூர் கேபிள் ஆபரேட்டர் வாயிலாக செயலாக்கம் செய்ய இயலாது.

புதிய பாக்ஸ் பெறலாம்

எனவே, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சந்தாதாரர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து செல்கையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸை சம்பந்தப்பட்ட உள்ளூர் கேபிள் ஆபரேட்டரிடம் ஒப்படைத்துவிட்டு புதிய இடத்தில் வேறு செட்டாப் பாக்ஸை அப்பகுதி கேபிள் ஆபரேட்டரிடம் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்