அதிமுகவுக்கு தடை இருந்தபோது கட்சி தாவல் தடை சட்டத்தில் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் டிடிவி தரப்பு வாதம்

அதிமுகவுக்கு தடை இருந்தபோது கட்சி தாவல் தடை சட்டத்தில் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என டிடிவி தினகரன் தரப்பு நீதிமன்றத்தில் வாதம். #AIADMK #TTVDhinakaran #18_mlas_disqualification_case

Update: 2018-07-23 07:50 GMT
சென்னை

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரிடம்  மனு அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 18 எம்.எல்.ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
 
இது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில்  நடைபெற்றது. இதில் இரண்டு நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கினர். இந்த வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு  3-வது நீதிபதி சத்யநாராயணன் முன் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று முதல் 5 நாட்களுக்கு தினமும் விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முதலில் டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராமன் தனது வாதத்தை முன்வைத்தார்.  மாறுப்பட்ட தீர்ப்பில் மட்டுமே 3-வது நீதிபதி முடிவு எடுக்க வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பில் இரு நீதிபதிகளுக்குள் ஒன்றுபட்ட கருத்து உள்ளது என்றார். உச்சநீதிமன்ற உத்தரவுகளை சுட்டிக்காட்டி டிடிவி தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார்.

சபாநாயகர் உத்தரவு, அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றார். 18  எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது மற்றும் உள்நோக்கம் கொண்டுள்ளது. தங்கள் தரப்பு நியாயங்களை நிரூபிக்க போதிய அவகாசம் வழங்கவில்லை என புகார் தெரிவித்தார். எம்.எல்.ஏ. ஜக்கையனுக்கு மட்டும் மாறுபட்ட முடிவை சபாநாயகர் எடுத்துள்ளார். சபாநாயகர் முன் தாக்கல் செய்யாத ஆவணம் அடிப்படையில் தகுதிநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என வாதிட்டார். ஜக்கையனுக்கும் 18 பேருக்கும் வெவ்வேறு அளவுகோலில் மதிப்பீடு செய்துள்ளனர்.

முதல்வருக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் மனு தந்த போது அதிமுகவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் இரட்டை இலை சின்னத்தையும் அப்போது தேர்தல் ஆணையம் முடக்கி இருந்தது. அதிமுகவுக்கு தடை இருந்தபோது கட்சி தாவல் தடை சட்டத்தில் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அரசுக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டனர் என்பதற்கு ஆதாரம் இல்லை. மேலும் சபாநாயகர் முடிவு எடுக்க உத்தரவிட வேண்டும் என்ற வழக்குகள் சுப்ரீம் கோர்ட்  நிலுவையில் உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்