கால்நடை மருத்துவ படிப்பு கலந்தாய்வு: முதல் 14 மாணவர்களில் 13 பேர் சென்னை கல்லூரியை தேர்வு செய்தனர்

கால்நடை மருத்துவ படிப்பு பொதுப்பிரிவு கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. முதல் 14 மாணவர்களில் 13 பேர் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தனர்.

Update: 2018-07-25 23:45 GMT
சென்னை,

கோழியின தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் மற்றும் உணவு தொழில்நுட்ப பிரிவுகளில் பி.டெக். படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.

கால்நடை மருத்துவ படிப்பு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னை வேப்பேரியில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு முதல் 14 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை வழங்கி பேசினார். முதன்மை செயலாளர் டாக்டர் கே.கோபால் வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தர் சி.பாலச்சந்திரன் வரவேற்றார். முடிவில் பல்கலைக்கழக பதிவாளர் திருநாவுக்கரசு நன்றி கூறினார். பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக் குழு தலைவர் டாக்டர் கே.என்.செல்வகுமார் உள்பட பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்தாய்வை நடத்தினர்.

முதல் 14 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளின் விவரம் வருமாறு:-

பி.ஸ்ரீகார்த்திகா (ஈரோடு) கட்ஆப் மதிப்பெண் 199.67, வி.நந்தினி (திருவள்ளூர்) 199.33, ஜி.பிரவீன்குமார் (வேலூர்) 199, எம்.பூஜிதா (பெரம்பலூர்) 199, எம்.தேவிஸ்ரீ (திருவண்ணாமலை) 198.75, டி.தமிழ்க்கொடி (நாகப்பட்டினம்) 198.50, என்.ராஜேஸ்வரி (வேலூர்) 198.33, ஜே.நிலவொளி (தர்மபுரி) 198.25, ஜி.அபினேஷ் (விருதுநகர்) 198.25, எஸ்.ஜெயபிரகாஷ் (பெரம்பலூர்) 198.25, ஆர்.கார்த்திக் (சேலம்) 198.25, ஆர்.தீபாலட்சுமி (வேலூர்) 198.25, எம்.எஸ்.உதயசங்கர் (நாமக்கல்) 198.25, ஆர்.சுவேதா (திருப்பூர்) 198.25.

இதில் வேலூரை சேர்ந்த என்.ராஜேஸ்வரி என்பவர் மட்டும் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார். மற்ற 13 பேரும் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தனர்.

சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு மற்றும் நெல்லையில் உள்ள 4 கால்நடை மருத்துவ கல்லூரிகளில் உள்ள 306 இடங்களுக்கு, 12,107 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 10,289 விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்ததாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களில் 824 பேருக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதில் 466 பேர் நேற்றைய கலந்தாய்வில் பங்கேற்றனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் நிரப்பப்பட்ட இடங்கள்போக மீதம் உள்ள 269 இடங்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வில் அனைத்து இடங்களையும் மாணவர்கள் தேர்வு செய்தனர். எஞ்சிய 197 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கோழியின தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் மற்றும் உணவு தொழில்நுட்ப பிரிவுகளில் பி.டெக். படிப்புகளுக்கான 88 இடங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) கலந்தாய்வு நடைபெறுகிறது. இதற்கு 588 மாணவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

கடந்த ஏப்ரல் மாதம் நானும், முதன்மை செயலாளர் டாக்டர் கே.கோபாலும் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மற்றும் ஒக்லகாமா மாகாண பல்கலைக்கழகங்களுக்கு சென்று பார்வையிட்டோம். அங்கு மேற்கொள்ளப்படும் நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றி இப்பல்கலைக்கழகத்தின் மூலம் பல்வேறு திட்டங்கள், பயிற்சிகளை செயல்படுத்தி தமிழ்நாட்டில் கால்நடை உற்பத்தியை பெருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஒக்லகாமா மாகாண பல்கலைக்கழக நிர்வாகிகள் நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். எனவே, வருங்காலங்களில் இந்த பல்கலைக்கழக மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு சென்று பயிற்சி பெற ஏற்பாடுகள் செய்யப்படும்.

விரைவில் 850 கால்நடை மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். வருகிற ஆண்டு முதல், பல்கலைக்கழக வளாக நேர்முகத் தேர்வுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்தாய்வில் முதல் இடம் பிடித்த ஈரோடு மாவட்டம் கொடுமுடி, சின்னவட்டத்தை சேர்ந்த பி.ஸ்ரீகார்த்திகா கூறும்போது, “எனது தந்தை பழனிசாமி விவசாயி. நான் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிளஸ்-2 படித்தேன். பொருளாதார வசதி இல்லாததால் நான் நீட் தேர்வுக்கான பயிற்சி பெறமுடியவில்லை. அதனால் நீட் தேர்வை எழுதவில்லை. தற்போது கால்நடை மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளேன்” என்றார். 

மேலும் செய்திகள்