தேர்வுத்துறைக்கு மாணவர்கள் கொடுத்த விவரங்கள் விற்பனை தனியார் நிறுவனங்களை சேர்ந்த 3 பேர் கைது

தேர்வுத்துறைக்கு கொடுத்த மாணவர்களின் விவரங்களை தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-07-29 22:30 GMT
சென்னை,

அரசு தேர்வுத்துறைக்கு பள்ளிகளில் இருந்து எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களின் செல்போன் எண், அவர்களின் சாதி, பிறந்ததேதி உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்படும். இந்தநிலையில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளை செல்போனில் சில தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளின் நிர்வாகிகள் தொடர்புகொண்டு, எங்கள் கல்லூரியில் சேருங்கள் என்று தொல்லை கொடுப்பதாக புகார்கள் எழுந்தன.

என்ஜினீயரிங் கல்லூரிகளின் நிர்வாகிகளுக்கு மாணவர்களின் செல்போன் எண்கள் எப்படி தெரிந்தது? என்ற கேள்வி எழுந்தது. மாணவர்களின் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் திருடப்பட்டு விட்டதாகவும், சில தனியார் இணையதள நிறுவனங்கள் மூலமாக அந்த விவரங்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டதாகவும் தெரியவந்தது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தராதேவி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் மாணவர்களின் விவரங்கள் வியாபார ரீதியாகவும், தவறான வழிமுறைகளுக்கு பயன்படுத்துவதற்காகவும் திருடப்பட்டு உள்ளது என்றும், இதனால் அரசு மற்றும் தேர்வுத்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மேற்படி சம்பவம் அமைந்து உள்ளதால் குறிப்பிட்ட இணையதளங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில், உதவி கமிஷனர் வேல்முருகன் ஆகியோர் மேற்பார்வையில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

விசாரணையில் சென்னை சாலிகிராமத்தில் செயல்படும் நாரி டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனமும், சென்னை அசோக்நகரில் செயல்படும் ஐ.டி.அக்யூமென்ட்ஸ் எனும் இணையதள நிறுவனமும், தியாகராயநகரில் செயல்படும் கே ஸ்கொயர் இந்தியா டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனமும் மாணவர்களின் விவரங்களை விலைக்கு வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது.

மேற்கண்ட நிறுவனங்கள் மாணவர்களின் விவரங்களை விலைக்கு வாங்கி பின்னர் அதை என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு விற்பனை செய்திருப்பதும் கண்டறியப்பட்டது. இதன்பேரில் நாரி டெக்னாலஜிஸ் நிறுவன உரிமையாளர் பிரவீன் சவுத்ரி (வயது 39), ஐ.டி.அக்யூமென்ட்ஸ் இணையதள நிறுவன அதிபர் சுதாகர் (32), கே ஸ்கொயர் இந்தியா டெக்னாலஜிஸ் நிறுவன அதிபர் வெங்கடராவ் (50) ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவர்கள் மீது தகவல் திருட்டு, தனிப்பட்ட அடையாள விவரங்கள் திருட்டு, மோசடி, கூட்டுச் சதி ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தகவல்களை திருடி மேற்கண்ட நிறுவனங்களுக்கு விற்பனை செய்த நபர்கள் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

மேற்கண்ட தகவல் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்