அண்ணா பல்கலைக்கழக முறைகேடு: தனி விசாரணை நடத்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழக முறைகேடு குறித்து தனி விசாரணை நடத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2018-08-03 20:00 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்ணா பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும், இதுதொடர்பாக அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் பேராசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது நீண்டகாலமாகவே நடைபெற்று வரும் முறைகேடு என்பதால் அதிர்ச்சியோ, வியப்போ ஏற்படவில்லை.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பருவத்தேர்வுக்கான விடைத்தாள் மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதாகவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் வழங்குவதற்காக ஒவ்வொரு விடைத்தாளுக்கும் ரூ.10,000 வீதம் லஞ்சம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊழல் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி நிலையில் மட்டும் நடந்திருக்க முடியாது. துணைவேந்தருக்கும் இதில் தொடர்பு இருக்க வேண்டும். உயர்கல்வித்துறை செயலாளர், அமைச்சர் ஆகியோருக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

அதுமட்டுமின்றி, மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் வழங்குவது ரகசியமாகவோ, வேறு யாருக்கும் தெரியாமலோ நடக்கவில்லை. வெளிப்படையாகவே நடந்துள்ளது. எனவே, மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டது தொடர்பான ஊழலை பேராசிரியர்கள், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி சம்பந்தப்பட்ட ஊழலாக மட்டும் பார்க்கக் கூடாது. இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள், உயர்கல்வித்துறை செயலாளர்கள், அமைச்சர்கள், தனியார் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு உள்ள தொடர்புகள் குறித்து தனி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமின்றி தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும், குறிப்பாக தபால் வழியில் கல்வி பயிலும் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. இது குறித்தும் விரிவான விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்