கட்சி நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

கட்சி நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார். #DMK #MKStalin #Karunanidhi

Update: 2018-08-07 10:07 GMT
சென்னை

திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து செல்கின்றனர். இதற்கிடையே கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதலே திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சற்றே பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின

பின்னர் மாலை 6.30 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலைக் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து காவேரி மருத்துவமனை வெளியே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். தொண்டர்களை கட்டுப்படுத்த போலீசாரும் தங்களது பாதுகாப்பை பலப்படுத்தினர். அத்துடன் சென்னை முழுவதும் முக்கிய இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

மருத்துவமனையின் 4-வது தளத்தில் ஸ்டாலின் ஒரு அவசர ஆலோசனை நடத்தினார். குடும்ப உறுப்பினர்களும், கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்ட கூட்டத்தில் கருணாநிதி உடல்நலம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் கட்சி தொண்டர்கள் ஏராளமாக குவியத் தொடங்கிவிட்டதால், அது சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுப்பது எனவும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு திடீரென மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். இவரும் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டனர். மு.க.அழகிரி, கனிமொழி, முரசொலி செல்வம், டி.ஆர்.பாலு, ஐ. பெரியசாமி உள்ளிட்டோரும் ஸ்டாலினுடன் வருகை தந்தனர். முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் அவர்கள் 20 நிமிடம் ஆலோசனை நடத்தினர். பின்னர் திரும்பி சென்றனர்.

காவேரி மருத்துவமனை பகுதியில் 2 துணை ஆணையர்கள், 4 உதவி ஆணையர்கள் தலைமையில் 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

இந்நிலையில், மருத்துவமனைக்கு வருகைத்தந்துள்ள மூத்த நிர்வாகிகளுடனும் காவேரி மருத்துவமனை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் திமுக தலைமை நிலைய மேலாளர்கள் ஜெயக்குமார், பத்மநாபன் ஆகியோரும் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தனர். அவர்களும் திமுக மூத்த நிர்வாகிகளுடன் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமாகி உள்ள நிலையில் அடுத்ததாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே மாலை 6 மணிக்கு பிறகு காவேரி மருத்துவமனையில் இருந்து கருணாநிதி உடல் நிலை குறித்த முக்கிய செய்திகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய ஏற்பாடுகள் செய்வது குறித்தே திமுக தலைமை நிலைய மேலாளர்கள் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் செய்திகள்