கருணாநிதி இறுதி அஞ்சலியில் கூட்ட நெரிசலில் காயம் அடைந்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்

கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வந்தனர்.

Update: 2018-08-09 22:30 GMT
சென்னை,

சென்னையில் கடந்த 7-ந் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் நேற்று முன்தினம் இறுதி அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வந்தனர்.

அப்போது பொதுமக்கள் இடையே கூட்ட நெரிசலில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் 4 பேர் பலியாகினர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் கோவிலம்பாக்கத்தை சேர்ந்த நாகூர் ஹணினீ (வயது 55), புழலை சேர்ந்த கென்னடி (55), எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த தங்கராஜ் (60) மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த அனிதா (42) ஆகியோர் நேற்று உள்நோயாளிகளாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினுடன் படுகாயம் அடைந்தவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் அடங்கிய பை மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கினார். இந்த நிகழ்வின்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி, கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்