கருணாநிதி சமாதியில் நடிகர்கள் கார்த்தி, விஜயகுமார் அஞ்சலி

கருணாநிதி சமாதியில் நடிகர்கள் கார்த்தி, விஜயகுமார் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

Update: 2018-08-10 22:00 GMT
சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் சமாதியில் நேற்றுமுன்தினம் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்து அஞ்சலி செலுத்தினர்.

சமாதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டு அதை சுற்றி சிமெண்ட் கற்கள் பதிக்கப்பட்டன. அந்த இடத்தில் நேற்று பழங்கள் மற்றும் பூக்களால் உதயசூரியன் வடிவில் அலங்கரிக்கப்பட்டது. அங்கு ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் புகைப்படம் அகற்றப்பட்டு, மர சட்டங்கள் பொருத்தப்பட்ட புதிய புகைப்படம் வைக்கப்பட்டது.

கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 3-வது நாளாக நேற்றும் தொடர்ந்து பலரும் வந்தவண்ணம் இருந்தனர். தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் திரண்டு வந்து சமாதியில் பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது சிலர் குழுவாகவும், தனியாகவும் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். சமாதிக்கு ஏராளமானவர்கள் வருவதால் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

‘முரசொலி’ நாளிதழின் 76-வது ஆண்டு நேற்று தொடங்கியதையொட்டி அதன் நிர்வாக இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் நேற்றைய நாளிதழ் பிரதி ஒன்றை கருணாநிதி சமாதியில் வைத்து வணங்கினார். கருணாநிதியின் மருமகள் மோகனா தமிழரசு தனது குடும்பத்தினருடன் வந்து அஞ்சலி செலுத்தினார். இதேபோல் கலைஞர் டி.வி. இயக்குனர் அமிர்தம், கருணாநிதியின் தனிச்செயலாளராக இருந்த ராஜமாணிக்கம் ஆகியோரும் தங்கள் குடும்பத்தினருடன் வந்து அஞ்சலி செலுத்தினர்.

எம்.எல்.ஏ.க்கள் பூங்கோதை ஆலடி அருணா, ஜெ.அன்பழகன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தி.மு.க. வர்த்தகர் அணி வி.பி.மணி, நடிகர்கள் விஜயகுமார், கார்த்தி, டைரக்டர் ஹரி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, லயோலா கல்லூரி முதல்வர் ஆண்ட்ரூ உள்பட முக்கிய பிரமுகர்கள் கருணாநிதி சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க. வக்கீல் அணி நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து கருணாநிதி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் தலைமையில் நிர்வாகிகள் மெழுகுவர்த்தியுடன் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர். இலக்கிய அணி மாநில செயலாளர் புலவர் ஆர்.இந்திரகுமாரி தலைமையில் இலக்கிய அணி நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் ஏ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், கு.க.செல்வம் உள்ளிட்டோர் மதிய உணவு வழங்கினர்.

நேற்று இரவு 9.45 மணி அளவில் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா, கருணாநிதி மகள் செல்வி மற்றும் உறவினர்கள் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர்.

கருணாநிதி சாமாதியில் வெள்ளியங்கிரி மலையை சேர்ந்த உதயகிரி சுவாமிகள் நேற்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “கருணாநிதி கடவுள் மறுப்பு கொள்கை உடையவராக இருந்தாலும் அன்பு, அரவணைப்பு, சாந்தம் ஆகியவற்றைத்தான் அறிவுறுத்தினார். தமிழக மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார். அவரும் ஒரு சித்தர் தான். அபூர்வமான மனிதர்களில் அவரும் ஒருவர். நான் 7 வயதில் இருந்தே வெள்ளியங்கிரி மலையில் சேவை செய்து வருகிறேன். திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு மனைவி, மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் செய்து முடித்துவிட்டு மீண்டும் கடவுளுக்கு பணி செய்ய சென்றுவிட்டேன். எனது குருநாதர் நாராயண குரு. ஜம்முவில் உள்ள அவரிடம் தான் தீட்சை பெற்றேன்” என்றார்.

மேலும் செய்திகள்