தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2018-08-18 00:00 GMT
சென்னை,

தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் கேரளாவில் தொடங்கியது. பொதுவாக தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பெய்யும். கேரளா, கர்நாடகாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் பெய்து வருகிறது.

இதன் காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது மழை வெளுத்து வாங்குகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்றும் (சனிக்கிழமை) மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகாவில் தீவிரம் அடைந்து இருக்கிறது. தற்போது கேரளாவில் தொடர் மழை பெய்து வருவதால், அதன் தாக்கம் காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

அடுத்த 24 மணி நேரத்திலும் (இன்றும்) இந்த 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரையில், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

சின்னக்கல்லாரில் 26 செ.மீ., வால்பாறையில் 21 செ.மீ., வால்பாறை தாலுகா அலுவலகத்தில் 17 செ.மீ., தேவலாவில் 11 செ.மீ., பெரியாரில் 9 செ.மீ., நடுவட்டம், செங்கோட்டையில் தலா 7 செ.மீ., ஜி பஜாரில் 6 செ.மீ., பழனி, பொள்ளாச்சி, கூடலூரில் தலா 4 செ.மீ., ஊட்டி, பாபநாசம், பேச்சிப்பாறை, குளச்சல், குழித்துறையில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

மேலும் செய்திகள்