‘அணைகளை பலப்படுத்த வேண்டும்’ தமிழக அரசுக்கு, திருநாவுக்கரசர் கோரிக்கை

தமிழகத்தில் உள்ள ‘அணைகளை பலப்படுத்த வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு, திருநாவுக்கரசர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

Update: 2018-08-23 17:21 GMT
சென்னை, 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

திருச்சி முக்கொம்பு உள்ளிட்ட சில அணைகள் உடைந்தும், இன்னும் சில அணைகள் கண்காணிக்கப்பட்டு சீர்செய்யவேண்டிய நிலையில் உள்ளதையும் தமிழக பொதுப்பணித்துறை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் அணைகளை சீர்செய்யவும், பராமரிக்கவும் வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திடவேண்டும். எதிர்காலத்தில் இதுபோல அணைகள் உடையாமல் இருக்க பலப்படுத்துகிற பணியையும் உடனடியாக தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும். இதற்கு தேவையான நிதியையும் உடனே ஒதுக்கவேண்டும்.

தமிழக ஆற்றுப்பகுதிகளில் அணைகளுக்கு அருகில் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு, நடைபெற்று வரும் மணல் கொள்ளை ஊழலே அணைகளின் பாதுகாப்பின்மைக்கு முக்கிய காரணமாகும். மணல் கொள்ளை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தண்ணீர் செல்லும் வழித்தடங்கள், வாய்க்கால்கள் சரியாக தூர்வாரப்படாமலும், ஆங்காங்கே உடைப்பு ஏற்படும் நிலையில் பலவீனமாக உள்ளதுமே காரணமாகும். கால்வாய்கள், வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்பட நிதி ஒதுக்கி, ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக பயன்படுத்தி பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொள்ள வேண்டும்.

இத்தகைய பணிகளை வேகமாகவும், முறையாகவும் செய்திட ஒரு வல்லுநர் குழுவையும், செயல்பாட்டுக் குழுவையும் பிரத்யேகமாக தமிழக அரசு ஏற்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்