‘சிவா மனசுல புஷ்பா’ திரைப்படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வழக்கு

‘சிவா மனசுல புஷ்பா’ என்ற திரைப்படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்கும்படி திரைப்படத் தணிக்கை வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-08-29 20:30 GMT
சென்னை,

சென்னை, கிழக்கு தாம்பரத்தை சேர்ந்தவர் வாராகி. பத்திரிகையாளரான இவர், ‘சிவா மனசுல புஷ்பா’ என்ற திரைப்படத்தை தயாரித்து, அந்த படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த படத்துக்கு தணிக்கை சான்று கேட்டு, தணிக்கை வாரியத்திடம் விண்ணப்பம் செய்தார். இந்த திரைப்படத்தை பார்த்த தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்கள், படத்தின் தலைப்பான ‘சிவா மனசுல புஷ்பா’ என்பதை மாற்ற வேண்டும். திரைப்படத்தில் எங்கெல்லாம் இந்த பெயர்கள் பயன்படுத்தப்படுகிறதோ, அவற்றையும் நீக்கவேண்டும் என்பது உள்பட 15 நிபந்தனைகளை கடந்த 14-ந்தேதி விதித்தனர்.

கருத்து சுதந்திரம்

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வாராகி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, ‘சிவா மனசுல புஷ்பா’ படத்தை தயாரித்துள்ளேன். இதுதான் எனக்கு முதல் படம். ஆனால், இந்த படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும். இந்த சிவா, புஷ்பா பெயர்கள் படத்தில் இடம் பெறக்கூடாது என்று தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு சட்டவிரோதமாகும். கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும். சிவா, புஷ்பா ஆகிய பெயர்கள் பொதுவானவை. இந்த பெயர்களை தழுவி ஏராளமானோர் உள்ளனர். இது, சாதி, மத ரீதியான பெயர்களும் இல்லை.

ரத்து செய்யவேண்டும்

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘சிவா மனசுல சக்தி’ என்ற திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் சான்று அளித்துள்ளது. அதேபோல, ‘இருட்டறையில் முரட்டு குத்து’ என்ற திரைப்படத்துக்கும் சான்று அளித்துள்ளது. அப்படி இருக்கும்போது, என்னுடைய படத்தின் தலைப்பை மட்டும் மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது சட்டவிரோதமாகும். ஒரு தலைபட்சமானது ஆகும்.

எனவே, ‘சிவா மனசுல புஷ்பா’ என்ற தலைப்பை மாற்ற வேண்டும் என்பது உள்பட 15 நிபந்தனைகளை விதித்து தணிக்கை வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். என் படத்துக்கு ‘ஏ’ சான்று அளிக்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நோட்டீஸ்

இந்த மனுவை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். பின்னர், இந்த மனுவுக்கு வருகிற 3-ந்தேதிக்குள் பதில் அளிக்கும்படி தணிக்கை வாரியத்தின் மண்டல அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்